“பிரான்ஸ் முழுவதுமே வன்முறையில் மூழ்கியிருப்பதுபோன்ற தோற்றம் உலக ஊடகங்களில் உருவாக்கப்படுகிறது. ஆனால், கள நிலவரம் அப்படியல்ல!” என்கிறார் பாரிஸில் வசிக்கும் சுயாதீனப் பத்திரிகையாளர் ஜேஸ்.
அவர் விரிவாகப் பேசுகையில், “பிரான்ஸில் போராட்டங்கள் புதிதல்ல. 1968-ல் மாணவர்களும் தொழிலாளர்களும் இணைந்து நடத்திய எழுச்சி, அந்நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமானது. தற்போதைய போராட்டமும் மாணவர்களின் கோரிக்கைகளில் தொடங்கி, தொழிற்சங்கங்களும் பொதுமக்களும் இணையும் போராட்டமாக மாறியிருக்கிறது.

ஆசிரியர் பற்றாக்குறை, பழமையான பள்ளிக் கட்டடங்கள் எனப் பல்வேறு பிரச்சனைகளை மாணவர்கள் முன்வைத்திருக்கிறார்கள். இந்தக் கோரிக்கைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்த பொதுமக்களும் ஆசிரியர்களும் மாணவர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கினர். சில இடங்களில் காவல்துறையினரின் தாக்குதல்களிலிருந்து மாணவர்களை ஆசிரியர்களே பாதுகாத்த காட்சிகளையும் பார்க்க முடிந்தது.
ஆனால், அமைதியாகத் தொடங்கிய இந்தப் போராட்டம் சில இடங்களில் கடுமையான வன்முறையாக மாறியது. பெரிய வணிக நிறுவனங்கள் மட்டுமல்லாமல், அவற்றுக்கு அருகிலிருந்த சிறிய கடைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. செல்போன் கடைகள், மளிகைக் கடைகள், சிறிய உணவகங்கள் எனச் சாதாரண மக்களின் வாழ்வாதாரமும் சேதமடைந்தது. அவற்றில் பல கடைகள் புலம்பெயர்ந்தவர்களால் நடத்தப்படுபவை என்பதையும் கவனிக்க வேண்டும்.
இங்கு முக்கியமாகப் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம், போராட்டக்காரர்களுக்கும் வன்முறையாளர்களுக்கும் உள்ள வேறுபாடு. பிரெஞ்சு மொழியில் பொதுச் சொத்துகளை உடைத்து நாசப்படுத்துபவர்களை ‘Casseurs’ என்று அழைப்பார்கள். அமைதியாக நடைபெறும் போராட்டங்களுக்குள் கறுப்பு உடையணிந்து நுழையும் சில வன்முறையாளர்கள், முதலில் காவல்துறையினருடன் மோதலை ஏற்படுத்துகிறார்கள். பின்னர் அருகிலுள்ள கடைகளின் கண்ணாடிகளை உடைத்து, ஷட்டர்களைச் சேதப்படுத்தி, பொருட்களைக் கொள்ளையடிக்கிறார்கள். இது திட்டமிட்ட குற்றச்செயல்.
அதேநேரத்தில், வரலாற்றுச் சின்னங்களையும் அரசு அலுவலகங்களையும் சிறு வணிகர்களின் கடைகளையும் சேதப்படுத்துவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. உண்மையாகப் போராடும் மக்களாலேயே இந்த வன்முறைக் கும்பல்களைத் தங்களிடமிருந்து பிரித்துக் காட்ட முடியாத நிலை உருவாகியிருக்கிறது.
இந்த வன்முறைகளுக்கு இன்னொரு ஆபத்தான பக்கமும் இருக்கிறது. பிரான்ஸில் நடைபெறும் சம்பவங்களை முன்வைத்து, ஆப்ரிக்க அமெரிக்கர்கள், வட ஆப்பிரிக்க வம்சாவளியினர், இஸ்லாமியர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் மீது வெறுப்புப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.