ஆயுஷ் ஹோமத்தை ஏன் செய்ய வேண்டும்?
இந்த ஹோமத்தை ஏன் செய்ய வேண்டும் என்று போதாயனர் விளக்குகிறார். ‘‘திதி, வார, நட்சத்திர, யோக, கரணங்களால் ஏற்படும் தோஷங்களுக்குப் பரிகாரமாகவும், ஆயுளை அபிவிருத்தி செய்யவும், தேக ஆரோக்கியத்துக்காகவும், என்னவென்று கார ணம் சொல்ல முடியாமல் ஏற்படும் மனவேதனைகளுக்குத் தீர்வாகவும், மருந்துகளால் தீர்க்க முடியாத நோய்களில் இருந்து நிவாரணம் பெறவும், இப்போது இருப்பதைவிட இன்னும் பலமடங்கு சுகமான வாழ்க்கையை அடைவதற்கும், ஆயுள் தேவதையின் அருளாசி பெற்றுப் பூரண ஆயுளுடன் உடல் மற்றும் மனநலம் குன்றாமல் வாழ்வதற்கும் ஜென்ம நட்சத்திர நாளில் இந்த ஹோமத்தை செய்ய வேண்டும்’’ என்கிறார் அவர்.
இந்த ஹோமத்தை எப்போது செய்ய வேண்டும்?
வசதியிருந்து ஒவ்வொரு மாதமும் சரியாக ஜென்ம நட்சத்திர நாளில் இந்த ஹோமத்தைச் செய்ய முடிந்தால் விசேஷம். அப்படி இல்லா விட்டாலும் ஆண்டுக்கு ஒரு தடவை அப்த பூர்த்தியின்போது செய்வது நல்லது. பெரும்பாலானோர் பிணிப்பாதிப்புகளுக்கு ஆட்படும் நிலையில் ஆயுஷ் ஹோமம் செய்து வழிபடுவது உண்டு.
குறிப்பாக… 60-ம் கல்யாணம், உக்ரரத சாந்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம், பூர்ணாபிஷேகம் போன்ற முக்கிய தருணங்களில் அவசியம் ஆயுஷ்ஹோமம் செய்து வழிபடுவது சிறப்பு.
குழந்தைகளுக்கு ஆயுஷ் ஹோமம்!
ஒரு குழந்தையின் பெயரில் செய்யப்படும் முதல் ஹோமமாக இதுதான் இருக்க வேண்டும். குழந்தை பிறந்த பிறகு முதல் ஒரு வருட காலம் அதைக் காப்பாற்றும் பொறுப்பை கடவுள் ஏற்றிருக் கிறார். அதனால் அந்த முதல் ஆண்டில் குழந்தைக்காக என்று ஹோமங்கள், யாகங்கள் தேவையில்லை. முதல் வயது முடிந்து அடுத்த வருஷம் ஆரம்பமாவதை ‘அப்த பூர்த்தி’ என்கிறோம். இந்த அப்த பூர்த்தியில்தான் ஆயுஷ்ய ஹோமத்தைச் செய்வார்கள்.
ஆயுஷ் ஹோமத்தின் முக்கிய அம்சங்கள்
மார்க்கண்டேயனைப் பிரார்த்தனை செய்து ஆயுஷ்ய ஹோமத்தை ஆரம்பிக்க வேண்டும். தீர்க்க ஆயுளை கேட்பதற்காகச் செய்யப்படும் இந்த ஹோமத்தின் மந்திரங்களை போதாயன ரிஷி உருவாக்கினார்.
பார்வதி- பரமேஸ்வரனை இந்த உலகத்துக்கு அம்மா- அப்பா என்பார்கள். அவர்கள் இருவரையும் திருப்தி செய்வதே இந்த ஹோமத்தில் முக்கியமான விஷயம்.
ஆயுஷ்ய ஹோமத்தின்போது ‘ஆயுஷ்ய சூக்தம்’ என்ற மந்திரங்களை பயன்படுத்த வேண்டும். ஓர் உயிரைக் கருவில் உருவாக்கச் செய்வது; அந்தக் கரு நல்ல முறையில் வளர உதவுவது; கருவில் வளர்ந்த குழந்தை உரிய சமயத்தில் பிரசவத்தின் மூலம் இந்த உலகைப் பார்க்கச் செய்வது; அந்தக் குழந்தைக்கு அழகையும் அறிவையும் ஆரோக்கியத்தையும் அளித்து நீண்ட காலம் வாழச் செய்வது… இப்படி எல்லாமே இறைவ னின் கையில்தான் இருக்கின்றன.
இவ்வளவையும் தந்த இறைவனுக்கு நன்றி சொல்வதோடு, ஆயுளையும் பலமாக்கிக் கொள்ளவே ஆயுஷ்ய ஹோமம் செய்யப் படுகிறது. ஹோமத்தில் செலுத்தப்படும் திரவியங்களும், நமது பிரார்த்தனையும் இறைவனை மகிழ்ச்சி அடைய வைக்கும். அந்த மகிழ்ச்சியில் குழந்தையின் ஆயுளை அவர் விருத்தி செய்கிறார். இப்படி இறைவனைப் புகழ்ந்து நன்றி சொல்பவையாக ஆயுஷ்ய சூக்த மந்திரங்கள் இருக்கின்றன.