தமிழக முதலமைச்சர் விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகருக்கு “பெஸ்ட் மாம்’ விருதை வழங்கியது அவள் விருதுகள். இந்த விருதை ஷோபா சந்திரசேகருக்கு வழங்கியவர், ஆனந்த விகடன் குழுமத்தின் மேலாண் இயக்குநர் பா. சீனிவாசன்.
ஷோபா சந்திரசேகர் குறித்து பா.சீனிவாசன் பேசியதாவது…
“ஒவ்வொரு தாயுமே கொண்டாடப்பட வேண்டியவர்தான். தன் அன்பாலும் தியாகத்தாலும் தலைமுறையையே தாங்கிப்பிடிக்கும் சக்தி தாய்மைக்கு மட்டுமே உண்டு.
`பிள்ளைகளின் கனவுகள் நனவாக வேண்டும்’ என நினைப்பதும், தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்துவதும் அம்மாக்களின் இயல்பு. 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் பிரபல கல்லூரியில் விஸ்காம் படித்துக்கொண்டிருந்த ஓர் இளைஞர், சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்ற கனவோடு தன் பெற்றோர் முன்னால் போய் நின்றார்.

அதிகம் பேசாத, கூச்ச சுபாவம்கொண்டவராக இருந்த அந்த இளைஞருக்கு ‘சினிமாவெல்லாம் சரியா வராது’ என்றார்கள் பலரும். ஆனால் `தன் மகன் நிச்சயம் சாதிப்பான்’ என முழுமையாக நம்பி, அவருக்காக நின்றார் ஒரு தாய்.
நடிகரான பிறகும் ஏராளமான விமர்சனங்கள். புதிதாக ஒரு கலைஞன் சினிமாவில் அறிமுகமாகும்போது இயல்பாக எழுகிற விமர்சனங்கள்தான். எல்லாவற்றையும் கடந்து, பதற்றப்படாமல் மகனின் மன உறுதியைக் காத்தார் அவர். ‘Ignore Negativity’ என்ற தாரக மந்திரத்தை அந்த இளைஞர் மனதில் ஆழமாகப் பதித்தவர் அவர்.