பீகார்: கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து; சிறார் உட்பட 11 பேர் நீரில் மூழ்கி பலியான சோகம் | 11 people, including children, drowned after a boat capsized in the Ganges River in Bihar

Spread the love

பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தைச் சேர்ந்த 20 பேர் பக்கத்து கிராமத்தில் நடக்கும் விருந்து ஒன்றில் பங்கேற்பதற்காக படகு ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் ரகோபூர் என்ற இடத்தில் கங்கை ஆற்றில் ஒரு கரையில் இருந்து மறுகரைக்குச் சென்றனர்.

படகு ஆற்றின் நடுவில் சென்று கொண்டிருந்தபோது திடீரென படகு கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்த அனைவரும் உதவி கேட்டு கத்தினர். அவர்கள் தண்ணீரில் உயிருக்குப் போராடினர். விபத்து குறித்து கேள்விப்பட்டதும் பக்கத்து கிராமத்து மக்களும், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புப் படையினர் இணைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஆனால், நீரில் மூழ்கி குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்துவிட்டனர்.

மீட்புப் படையினர் காணாமல் போனவர்களைத் தேடி வருகின்றனர். ஆரம்பத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 5 முதல் 8 இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது.

ஆனால் பின்னர் இறந்தவர்கள் எண்ணிக்கை 11 என்று மாவட்ட நீதிபதி தெரிவித்தார். 5 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பீகார் முதல்வர் சாம்ராட் சவுத்ரி, இறந்தவர்கள் குடும்பத்திற்குத் தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவும் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். கங்கை ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்ததையடுத்து, தனியார் படகுகளை இயக்க நிர்வாகம் தடை விதித்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், மக்களை ஆற்றின் மறுபக்கத்திற்குக் கொண்டு செல்ல படகுகள் தொடர்ந்து சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. இது போன்ற சட்டவிரோத படகுகளை ஏன் தடுக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *