ஊரு தூங்கும் நேரம் ஊருக்கு நடுவே…
உசுர கொல்லும் புகை கொழுந்துட்டு எரிய.. என்ற வரிகளை ஒருவர் பாடுவதுபோல காண்போர் மனதை பதைபதைக்க வைக்கும் காணொளிகள்,
`seemai vibes’ என்ற வலைதளப் பக்கத்தில் வெளியாகின. காணொளியில் குப்பை, மலைபோல குவிந்து கிடக்க… `நச்சு காற்றாலும் சுகாதாரக் கேடாலும் உயிர்பலிகள் ஆன பின்புதான் நடவடிக்கை எடுக்கப்படுமா?
அதன் பின்புதான் சிவகங்கை மருத்துவக் கல்லூரி அருகே உள்ள குப்பைகள் அகற்றப்படுமா?’
தலைப்பிடப்பட்ட காணொளியை பார்த்த உடனே சம்பவ இடத்திற்குச் சென்றோம்.

சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அருகாமையிலேயே குப்பைகள் குவிந்து கிடப்பதை சாலையில் போகும்போதே காண முடிந்தது. கொடைக்கானல் மற்றும் ஊட்டி போல பனி சூழ்ந்து காணப்படுவது போன்று குப்பைகளை கொட்டி எரிக்கப்படும் புகை, அந்தப் பகுதியைச் சுற்றிப் பரவிக் கிடந்தது. சற்று உள்ளே நடந்து செல்ல செல்ல மூச்சுத்திணறலுடன் லேசான நெஞ்செரிப்பும் ஏற்படுவதுபோல தெரிந்தது.
கோழி இறக்கைகள், கண்ணாடிப் பொருள்கள், மின்சாதனப் பொருள்கள், நெகிழிகள் எனப் பலதரப்பட்ட மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் மொத்தமாக கொட்டப்பட்டு ஒருபுறம் எரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஒரு புறம் அப்போதுதான் ஒரு நகராட்சி வண்டி, குப்பைகளைக் கொட்டிவிட்டுச் செல்வதைக் காண முடிந்தது.
சமூக ஆர்வலர்களின் குமுறல்கள்
இதற்கு முன் எங்கு குப்பைகள் கொட்டப்பட்டது, இதற்கு ஆட்சியாளர்கள் யாராவது நடவடிக்கை எடுத்தார்களா என்ற கேள்விக்கு…
சமூக ஆர்வலர்களான குட்டிமணி, பாரதி, முத்தமிழ் ஆகிய மூவரின் பதில்,
“தமிழ்நாடு அரசு என்ன சொல்கிறது, மக்கும் குப்பை, மக்கா குப்பை எனப் பிரித்துக் கொட்ட வேண்டும். ஆனால் சிவகங்கை நகராட்சியில் அப்பகுதியில் உள்ள மக்களிடம் குப்பைகளை மொத்தமாக வாங்கி அரசு மருத்துவமனைக்கு அருகாமையில் கொட்டுகின்றனர். மேலும் இந்தக் குப்பைகள் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக எரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பல தனியார் மருத்துவமனைக் கழிவுகளும் இங்கே கொட்டப்படுகின்றன. இங்கு உள்ள மருத்துவமனையின் சில கழிவுகளையும் இங்கேதான் கொட்டுகிறார்கள். மக்கள் பல்வேறு நோய்ப் பிரச்னைகளுக்கு தீர்வு காண இந்த மருத்துவமனைக்கு வருகிறார்கள். ஆனால் அவர்கள் இங்கு வந்த பிறகுதான் பிரச்னையே ஏற்படுகிறது என்பதுதான் அவலம்.

நாங்களே இங்கு உள்ள மக்களை திரட்டி பதினைந்திற்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடத்தியிருக்கிறோம். நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் கொடுத்திருக்கிறோம்.
குப்பைகளை சிவகங்கை நகராட்சி வாசலில் கொட்டியும் போராட்டம் செய்தோம். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொட்டியும் போராட்டம் செய்தோம். இருந்தும் எந்தப் பயனும் இல்லை. மூன்று ஆட்சியர்கள் மாறி விட்டனர். நகராட்சி ஆணையர்களும் மாறுகின்றனர். ஆனால் இடம் மாறுவதுபோல் தெரியவில்லை. இதற்கு முன் சுந்தர நடப்பு என்ற கிராமத்தில்தான் குப்பைகளைக் கொட்டி மறுசுழற்சி செய்து வந்தனர்.
தற்போது மூன்று ஆண்டுகளாக இங்கே கொட்டுகிறார்கள். மேலும் குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்காக வாங்கப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்களும் அங்கே பாழடைந்து கிடக்கின்றன. நீதிமன்றம் கூட அந்த கிராமத்தில்தான் அந்தப் பணிகள் நடைபெற வேண்டும் என்று அறிவுறுத்தியது. அதனை நகராட்சி ஆணையரும் மதிப்பதில்லை, மாவட்ட ஆட்சியரும் மதிப்பதில்லை.

எங்களைப் போன்ற தன்னார்வலர்களின் முயற்சியாலும் மக்களின் போராட்டங்களாலும் ஆட்சியாளர்கள் இது போன்ற அவல நிலையைக் கண்டு இந்த இடங்களுக்கெல்லாம் வருகிறார்கள். குப்பைகளைச் சுத்தம் செய்வது போன்று வீடியோ எடுத்துக் கொண்டு, சென்று விடுகிறார்கள்.
நாங்கள்தான் குப்பையை அகற்ற வேண்டும் என்ற காணொளியை வலைதளத்தில் பதிவிட்டோம். அதனைப் பார்த்த அதிகாரிகள், எங்களிடமே சுத்தம் செய்வது போன்ற பழைய புகைப்படங்களை அனுப்பி, அவற்றை போஸ்ட் செய்யுமாறு கூறுகிறார்கள்” எனக் குமுறினார்கள்.
மருத்துவமனை தரப்பில் சொல்வது என்ன?
இது குறித்து கல்லூரி முதல்வர் மற்றும் மருத்துவ அலுவலரிடம்,
“இந்த குப்பை மேட்டில் இந்த மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகளும் கொட்டப்படுகிறதாமே உண்மையா?” என்று கேட்டபோது,
“அதற்கான வாய்ப்பே இல்லை. ஏனென்றால் நாங்கள் தனியாக Bio Medical Wastage Management ஒன்று வைத்து அதன் மூலம் கழிவுகளைச் சேமித்து தஞ்சாவூர் அருகில் உள்ள கிடங்கிற்கு அனுப்புகிறோம். அதற்கு நாங்கள் மாதம் மாதம் பணம் செலுத்துகிறோம். நாங்களே அதனை ஒருங்கிணைத்து அனுப்புகிறோம். அதற்காக ஊழியர்கள் நியமித்தும் வைத்திருக்கிறோம். எங்களிடம் ரெகார்டு இருக்கிறது.
அந்தக் குப்பைகள் அனைத்தும் நகராட்சி சார்பில்தான் கொட்டப்படுகிறது” என்று கூறினார்கள்.
“இந்தக் காற்று மாசுபட்டால் மருத்துவமனை மற்றும் அங்குள்ள நோயாளிகளுக்கும் தானே பிரச்னை, உங்கள் சார்பில் ஏதாவது நடவடிக்கை எடுத்தீர்களா?” என்று கேட்டதற்கு,
“ஆமாம்! இதனால் எங்களுக்கும்தான் பிரச்னை. மேலும் நாங்கள் நான்கு முறை மாவட்ட ஆட்சியரிடம் புகார் கடிதம் அளித்தோம். அந்தப் புகார் அளித்த நகலும் எங்களிடம் உள்ளது. நீங்கள் ஏதாவது தீர்வு கண்டாலும் எங்களுக்கு நல்லதுதான்” என்று கூறினார்கள்.

இது குறித்து சிவகங்கை நகராட்சி அலுவலர்களிடம் கேட்டதற்கு, “நாங்கள் அங்கு கொட்டவில்லை. வாணியங்குடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட குப்பை வண்டிகள்தான் அங்கு கொட்டிச் செல்கின்றன” என்றனர். ஆனால் அங்கு சிவகங்கை நகராட்சி வாகனம் வந்ததையும், அங்கு வந்து குப்பையைக் கொட்டியதையும் நாங்கள் பார்த்தோம் என்று கூறிய பிறகு, “எங்களுக்கு கொட்டுவதற்கு வேறு இடம் கிடைக்கவில்லை” என்று அவர்கள் கூறினார்கள். தொடர்ந்து, “அருகாமையில் உள்ள சுந்தர நடப்பு எனும் கிராமத்தில்தான் நகராட்சிக்குச் சொந்தமான இடம் உள்ளது. பல காலமாக அங்குதான் கொட்டி மறுசுழற்சி செய்து வந்தோம். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக அங்கு குப்பைகளை கொட்டுவதற்கு சுந்தர நடப்பு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அந்த ஊரிலிருந்து குப்பை மேடு சற்று தொலைவுதான். இருந்தும் இப்போதுதான் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அனைத்து வார்டுகளுக்கும் தனியே மறுசுழற்சி செய்யும் இடம் தேவை. மீதிக் குப்பைகளை அங்கு போய்தான் கொட்டுகிறார்கள். மாவட்ட ஆட்சியரால் முடியாதது ஒன்றுமில்லை… ஒன்று புது இடம் ஏற்பாடு செய்து தர வேண்டும். இல்லையென்றால் அதே கிராமத்தில் அமைதி முறையில் பேச்சுவார்த்தை நடத்தி குப்பைகளைக் கொட்ட அனுமதி பெற்று தரவேண்டும். பழைய இடத்தில் பெரிய தொகையிலான உபகரணங்கள் தற்போது பயனற்றுக் கிடக்கின்றன. உயர் அதிகாரிகள்தான் நல்ல பதில் சொல்ல வேண்டும்” என்றனர்.

அரசு அதிகாரிகள் தங்களை நோக்கி வைக்கப்படுகிற கோரிக்கைகளையும், நியாயமான கேள்விகளையும்… துறைரீதியாக கைமாற்றிக் காட்டி, தப்பிக்கப் பார்ப்பது, ஒருபோதும் தீர்வுக்கு வித்திடாது!
மக்கள் உடல்நலம் சார்ந்த இந்தப் பிரச்னையில் அரசு நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.