தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, தனது பெயரில் மாற்றம் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இனி அவர் “கனிமொழி ராஜாத்தி கருணாநிதி” (Kanimozhi Rajathi Karunanidhi) என்ற பெயரில் அறியப்படுவார்.
தந்தை கலைஞர் பெயருடன் தாயார் பெயரும் இணைப்பு :
இதுவரை அரசியல் மற்றும் பொது வெளியில் “கனிமொழி கருணாநிதி” என்ற பெயரில் அறியப்பட்டு வந்த கனிமொழி, தற்போது தனது தாயார் ராஜாத்தி அம்மாளின் பெயரையும் தனது பெயரில் இணைத்துள்ளார்.
இதன் மூலம், தந்தை முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் பெயருடன், தாயார் ராஜாத்தி அம்மாளின் பெயரையும் சேர்த்து தனது பெயரை மாற்றியுள்ளார்.
இலக்கிய உலகில் இருந்து அரசியல் பயணம் வரை :
அரசியலுக்கு வருவதற்கு முன்பு கனிமொழி, எழுத்தாளர் மற்றும் இலக்கியவாதியாக “கனிமொழி” என்ற பெயரில் அறியப்பட்டார். பின்னர் அரசியல் களத்தில் பயணிக்கத் தொடங்கிய பிறகு, அவரது பெயருடன் கலைஞர் கருணாநிதியின் பெயரும் இணைக்கப்பட்டு “கனிமொழி கருணாநிதி” என அழைக்கப்பட்டார்.
தற்போது குடும்ப அடையாளத்தில் தாயாரின் பெயருக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில், “ராஜாத்தி” என்ற பெயரை தனது பெயரில் சேர்த்துள்ளார்.
சட்டப்பூர்வ அறிவிப்பு வெளியீடு :
பெயர் மாற்றம் தொடர்பாக கடந்த ஜூன் 9-ஆம் தேதி நாளிதழில் வெளியிடப்பட்ட சட்டப்பூர்வ அறிவிப்பில், சென்னை நகரில் 1968 ஜனவரி 5-ஆம் தேதி பிறந்த கனிமொழி கருணாநிதி, இனி “கனிமொழி ராஜாத்தி கருணாநிதி” என்ற பெயரில் அறியப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பதிவுகளிலும் மாற்றம் :
கனிமொழியின் பெயர் மாற்றம் தொடர்பான விவரங்கள் தற்போது நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ குறிப்புகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தந்தை கலைஞர் கருணாநிதியின் அரசியல் பாரம்பரியத்தையும், தாயார் ராஜாத்தி அம்மாளின் பெயரையும் இணைத்து, தனது புதிய பெயரை கனிமொழி அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தியுள்ளார்.

