புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஸ்ரீவீரமாகாளியம்மன் கோயில்: மாவிளக்கு ஏற்றினால் மங்கலம் பெருகும்! | aranthangi veeramakaliamman kovil

Spread the love

தற்போது இருக்கும் இந்த ஆலயம் 300 ஆண்டுகள் பழைமையான கட்டுமானம் என்றாலும் ஆலயத்தின் தொன்மையோ மகாபாரத காலம் வரை செல்கிறது. மகாபாரதத்தில் வனவாசத்தின்போது, வீரவனம் என்று அழைக்கப்பட்டதாம் அறந்தாங்கிப் பகுதி. இங்கு பஞ்சபாண்டவர்கள் வந்ததாகவும், அப்போது இந்த அம்மனை தரிசித்து வணங்கித் தாங்கள் தங்க அனுமதி தரவேண்டும் என்று வேண்டியதாகவும் அதற்கு அன்னை மகிழ்ந்து அவர்கள் தங்குவதற்கு நல்ல இடத்தை அம்மன் காட்டி அருளியதாகவும் சொல்வர்.

வசந்த மண்டபம், மகா மண்டபம் என பிரமாண்டமாகத் திகழ்கிறது, ஸ்ரீவீரமாகாளியம்மன் கோயில். திருமுடியில் பாம்பை ஆபரணமாகக் கொண்டு, அற்புதமாகக் காட்சி தருகிறாள் அன்னை. செவியில், சிவனாருக்கு உரிய அணிகலனை அணிந்திருக்கும் அழகே அழகு!

தன்னை நாடி வருவோரின் துயர் துடைக்க, அமர்ந்த திருக்கோலத்தில் இருந்தபடி அருள்பாலிக்கிறாள் ஸ்ரீவீரமாகாளியம்மன். சூலம், பத்மம், உடுக்கை, மழு, பாசம், கேடயம், கபாலம் ஆகியவற்றை ஏந்தியபடி, கருணையே உருவெனக் கொண்டு காட்சி தரும் அன்னையை வணங்கினால், வீட்டில் சுபகாரியங்கள் நிகழும் என்பது ஐதிகம்.

சித்திரைப் பிறப்பு, வைகாசி விசாகம், ஆனித் திருமஞ்சனம், ஆடிப்பெருக்கு, ஆவணி அவிட்டம், புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி தீபாவளி, கார்த்திகையில் தீபம், மார்கழியில் வைகுண்ட ஏகாதசி, தை மாதப் பிறப்பு, மாசி மகம் மற்றும் சிவராத்திரி என வருடம் முழுவதும் இங்கு திருவிழாக்களுக்குப் பஞ்சமே இல்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *