International
oi-Nantha Kumar R
வாடிகன்: போப்பாண்டவர் லியோ உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போப் லியோவிற்கு வெற்றிக்கரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவரது நுரையீரலின் ஒருபகுதி அகற்றப்பட்டுள்ளது.

கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் போப் பிரான்ஸ்சிஸ் தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு பிறகு புதிய போப்பாண்டவராக லியோ தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு வயது 71. இவர் 2025 மே மாதம் முதல் போப்பாண்டவராக செயல்பட்டு வருகிறார்.
வாடிகன் நகரில் போப்பாண்டவர் லியோ வசித்து வருகிறார். உலகளவில் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக போப்பாண்டவர் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தான் லியோவிற்கு சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவரது நுரையீரலில் கட்டி இருப்பது தெரியவந்தது. அது புற்றுநோய் கட்டியாக இருக்கலாம் என்ற சந்தேகம் வந்தது.
இதற்கான பரிசோதனைக்காக அவர் ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் பரிசோதனைகள் மேற்கொண்டனர். அப்போது அவர் Adenocarcinoma எனும் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அதற்கான அறுவை சிகிச்சை நேற்று மேற்கொள்ளப்பட்டது. சுமார் 90 நிமிடங்கள் நடந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. வலதுபக்க நுரையீரலின் புற்றுநோய் பாதித்த அடிப்பகுதி அகற்றப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பிறகு போப்பாண்டவர் லியோ நலமாக உள்ளார்.அவர் மருத்துவமனை அறையில் ஓய்வில் உள்ளார்.
இந்த அறுவை சிகிச்சையின் காரணமாக போப் லியோ ஒரு வாரம் வரை மருத்துவமனையில் ஓய்வில் இருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் அக்டோபர் 20ம் தேதி வரை போப் லியா தொடர்பான அனைத்து பொதுநிகழ்ச்சிகளிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.