அவர்களுக்கு என்னசெய்வதென்றே தெரிய வில்லை. அவர்களுக்கு உதவ, அக்கம்பக்கத்திலும் வேறு எவரும் இல்லை. அப்போது மரத்தின் உச்சியிலிருந்து ஓர் அசரீரி ஒலித்தது.
‘கட்டியிருக்கும் தொட்டிலுக்குக் கீழே அழுத கண்ணீரை அகற்றும் வல்லமைப் படைத்த சிவன் திருமேனி ஒன்று மண்ணுள் மறைந்திருக்கிறது. இறைவனின் திருவுருவச் சிலையை வெளியே எடுத்து வழிபடுவதாக வாக்குக் கொடுத்தால், அந்தரத்தில் மிதக்கும் குழந்தை சிறிது நேரத்தில் தொட்டிலில் இருக்கும்’ என்றது அசரீரி வாக்கு.
அந்தக் குடும்பத்தவர்களும் அசரீரி சொன்னபடியே செய்வதாக சத்தியம் செய்து கொடுத்தனர். அடுத்த சில கணங்களில், அந்தக் குழந்தை சிரித்தபடி தொட்டிலில் புரண்டு கொண்டிருந்தது. இரண்டு குடும்பங்களும் மகிழ்ந்தன. ‘அழுத கண்ணீரைத் துடைத்த ஈஸ்வரா… எங்கள் ஈஸ்வரா…’ என்று எல்லோரும் கரம் கூப்பி மகிழ்ச்சியுடன் வழிபட்டனர்.

பின்னர் அழகர்கோயில் நேர்த்திக்கடனைச் செலுத்திவிட்டுச் சொந்த ஊர் திரும்பியவர்கள், அங்கு அவர்களின் குலசாமியான அழகுமுத்துக் கருப்பண சுவாமி கோயிலின் பிடிமண்ணை எடுத்து வந்தார்கள். இங்கே இந்தப் பகுதியில் படர்ந்திருந்த நெருஞ்சி முள்களையெல்லாம் அப்புறப்படுத்தினார்கள். அசரீரி குறிப்பிட்ட இடத்தில், கீழே புதைந்திருந்த… ரிஷப வாகனத்தில் அம்மை-அப்பன் இருக்கும் சிலையை மேலே எடுத்து, ஆலயம் அமைத்தனர் என்கிறது தலவரலாறு.
இந்த இறைவன் `அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன்” என்ற திருநாமமும் நிலைத்தது. அன்று முதல் இன்றுவரை இந்தச் சுவாமியை நம்பிவந்து தம் கஷ்டங்களைச் சொல்லி முறையிட்டால் உடனே அவர்களின் குறைகளை நீக்க அருள்செய்வார் என்பது கண்கூடு என்கிறார்கள் பக்தர்கள்.
நாள்தோறும் யாரேனும் ஒருவர் வந்து ஈசன் தமக்குச் செய்த அற்புதத்தைச் சொல்லி வழிபட்டுச் செல்கிறார்கள்.
மேலும் சகல தரப்பு மக்களுக்கும் கண்கண்ட தெய்வமாகத் திகழ்கிறார் இந்த ஈஸ்வரன். புராணங்களிலும்கூட இக்கோயில் பற்றிய தகவல் உள்ளது என்கிறார்கள். திருமணத்தடை உள்ளவர்கள், வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டவர்கள், குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள், உடல் நலம் குன்றியவர்கள், வாழ்க்கையில் நிம்மதியை இழந்தவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்யலாம். விரைவில் அவர்களின் கவலைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
மகா சிவராத்திரி இங்கே மிகவும் விசேஷமாக நடைபெறுகிறது. பிரதோஷம், நவராத்திரி, பெரிய கார்த்திகை போன்ற விசேஷ நாள்களிலும் மக்கள் அதிகம் வருகிறார்கள்.
மதுரை செல்பவர்கள் எப்படி அழகர்கோயிலையும் மீனாட்சி அம்மன் கோயிலையும் தரிசிக்கிறார்களோ அதேபோன்று விராதனூர் அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரனையும் ஒருமுறை தரிசிக்க வேண்டும். அப்படி தரிசிப்பவர்களுக்கு ஈசன் எப்போதும் துணையிருந்து அருள்வான். வாழ்க்கை வளமாகும்; நலமாகும்.