1942-ல் காந்தியடிகள் தொடங்கிய வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தனது கணவர் ஜி. ராமச்சந்திரனுடன் இணைந்து மதுரையில் பெண்களை பெருமளவில் ஒன்றுதிரட்டி, அந்நியத் துணிகள் புறக்கணிப்பு, கள்ளுக்கடை மறியல் போன்ற போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்தினார்.
1947-ஆம் ஆண்டு திண்டுக்கல் அருகே சின்னாளப்பட்டியில் இரண்டு படுக்கைகளுடன் ஒரு சிறிய மருத்துவக் கூடத்தைத் தொடங்கினார். சின்னாளப்பட்டி சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள ஏழைப் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு டி.எஸ்.சௌந்தரமே நேரில் சென்று பிரசவம் பார்த்தார். இவரது அயராது உழைப்பால் அந்தச் சிறிய மருத்துவக் கூடம் இன்று 220-க்கும் மேற்பட்ட படுக்கைகளைக் கொண்ட நவீன வசதிகள் கொண்ட கஸ்தூரிபா மருத்துவமனையாக உருவெடுத்துள்ளது.
கிராமப்புற இளைஞர்களுக்குக் கல்வி மற்றும் சுயவேலைவாய்ப்பை உருவாக்க 1956-ஆம் ஆண்டு காந்திகிராம கிராமப்புற தொழில் பயிற்சி மையத்தை தொடங்கினார். இந்த தொழில் பயிற்சி மையம் பின்னர் மத்திய அரசால் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டபோது, அதன் முதல் வேந்தராக பொறுப்பேற்றுக் கொண்ட, மருத்துவர்.டி.எஸ்.சௌந்தரம் 1980-ஆம் ஆண்டு முதல் 1984-ஆம் ஆண்டு வரை சிறப்பாக செயல்பட்டார்.
பெண்களின் பொருளாதார சுதந்திரத்திற்காகக் காந்திகிராமத்தில் நூற்பு, நெசவு, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் அச்சுக்கூடம் போன்றவற்றைத் தொடங்கி தொழில் முனைவோராக உருவெடுக்க சுயதொழில் பயிற்சி வழங்கினார்.
1952–ஆம் ஆண்டு முதல் 1962-ஆம் ஆண்டு வரை சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராகவும், பின்னர் 1967-ஆம் ஆண்டு வரை திண்டுக்கல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அமைச்சரவையில் மத்திய கல்வித்துறை துணை அமைச்சராகப் பொறுப்பு வகித்த போது, தொடக்கக் கல்வியை இலவசமாக்கும் சட்டத்தைக் கொண்டு வருவதில் தீவிரமாக செயல்பட்டார். இவரே மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற முதல் தமிழகப் பெண்.
தன்னுடைய அரசியல், மருத்துவ செல்வாக்கை நாட்டின் விடுதலைக்காகவும், சாதி, தீண்டாமை ஒழிப்பிற்காகவும் முழுமையாகப் பயன்படுத்திய மிகச்சில பெண் தலைவர்களில் மருத்துவர்.சௌந்தரம் முதன்மையானவர்.