தஞ்சாவூரில், போதை மாத்திரை விற்பனை அதிகளவில் நடைபெறுவதாக, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து, போதை தடுப்புப் பிரிவு போலீசார் கீழவாசல் பகுதியில் சோதனை செய்தனர். அப்போது, கீழவாசல், வண்ணாரத்துறையைச் சேர்ந்த பிரபல ரெளவுடி பிரகாஷ்(26) (எ) மாடு பிரகாஷிடம் அதிகளவில் போதை மாத்திரைகள் இருந்துள்ளன. இதையடுத்து அவரைப் பிடித்த போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவரது நண்பர்களான கீழவாசல், சின்னையபிள்ளை தெருவைச் சேர்ந்த முகமது அப்பாஸ்(25), சுண்ணாம்புக்கார தெருவைச் சேர்ந்த சுபாஷ்(24), மற்றும் அன்னப்பேட்டையைச் சேர்ந்த சஞ்சய் சம்பத்(23) ஆகியோரிடம், 6,000 டாபென்டாடால் என்கிற போதை மாத்திரைக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, பிரகாஷ், அப்பாஸ், சுபாஷ், சஞ்சய் சம்பத் ஆகிய நான்கு பேரையும் கிழக்கு போலீஸில் ஒப்படைத்தனர்.
மேலும் நான்கு பேர் மீதும் கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6,000 போதை மாத்திரைகள், ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்த போதை மாத்திரையின் மதிப்பு சுமார் ரூ.60,000 என்கிறார்கள்.