மாஸ் காட்டும் புதின் கட்சி! ரஷ்ய நாடாளுமன்ற தேர்தலில்.. பெரிய மாற்றம்! | United Russia wins wartime Duma elections with 57% vote share

Spread the love

International

oi-Halley Karthik

மாஸ்கோ: உக்ரைனின் ட்ரோன் மற்றும் சைபர் தாக்குதலுக்கு இடையில் ரஷ்ய நாடாளுமன்ற தேர்தல் நடந்திருக்கிறது. இந்த தேர்தலில் புதினின் கட்சி எளிதாக ஜெயிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதினின் ஆளுங்கட்சியான ‘யுனைடெட் ரஷ்யா’ பெரும்பான்மையான வாக்குகளுடன் மீண்டும் எளிதாக வெற்றிபெறும் பாதையில் உள்ளது. முதற்கட்ட தேர்தல் முடிவுகளின்படி, புதினின் யுனைடெட் ரஷ்யா கட்சி 57.5% வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளது.

Russia election

கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரியில் உக்ரைன் மீதான போர் தொடங்கியது. இந்த போருக்கு பிறகு ரஷ்யாவில் நடைபெறும் முதல் நாடாளுமன்ற தேர்தல் இதுவாகும். புதினின் போர்க் கொள்கைகளுக்கு பொதுமக்களிடம் இருக்கும் ஆதரவை சோதிக்கும் ஒரு களமாகவே இந்த தேர்தல் நடைபெறுகிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், போருக்கு எதிரான பெரும்பாலான எதிர்க்கட்சி வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டிருந்தனர்.

கம்யூனிஸ்ட் கட்சி, எல்.டி.பி.ஆர், நியூ பீப்பிள் போன்ற பிற அனுமதிக்கப்பட்ட கட்சிகள் மிக குறைந்த வாக்குகளுடன் நாடாளுமன்றத்தின் 450 இடங்களில் சில இடங்களை பெற வாய்ப்புள்ளது. போரை எதிர்க்கும் மக்கள் மதியம் 12 மணிக்கு வாக்குச்சாவடிகளில் திரண்டு தங்களின் எதிர்ப்பை பதிவு செய்யுமாறு அரசியல் கட்சித் தலைவர்கள் அழைப்பு விடுத்தனர். சில இடங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

தேர்தல் நடந்த அதே வேளையில் மாஸ்கோ மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் மீது உக்ரைன் வரலாற்றிலேயே இல்லாத அளவிலான மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியது. மாஸ்கோ பகுதியில் 3 பேரும் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் கெர்சன் பகுதியில் ஒரு தேர்தல் அதிகாரி உட்பட 2 பேர் இந்த தாக்குதலில் உயிரிழந்தனர்.

மாஸ்கோவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் தீ விபத்து ஏற்பட்டு புகை மண்டலமாக மாறியது. எனினும் தேர்தலை குலைக்கும் உக்ரைனின் முயற்சி தோல்வியடைந்துவிட்டதாக மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்திருக்கிறார்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உக்ரைனின் சுமார் 2,000 ட்ரோன்களையும், 8 ஃபிளமிங்கோ க்ரூஸ் ஏவுகணைகளையும் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இதற்கு பதிலடியாக உக்ரைனின் ராணுவ இலக்குகள் மீதான தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தும் என்று கூறியுள்ளது. ரஷ்யாவின் தேர்தல் வாக்குப்பதிவு அமைப்புகள் மீது தொடர்ச்சியான இணைய தாக்குதல்கள் நடத்தப்பட்டபோதிலும், ஒட்டுமொத்த தேர்தல் செயல்பாடுகளையும் பெரிய தடங்கலின்றி சீராக நடந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *