தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டு கையும் களவுமாக பிடிப்பட்ட ஐஏஎஸ் அதிகாரியை மின்சார வாரிய விநியோக பிரிவின் இணை இயக்குனராக தவெக அரசு நியமித்துள்ள நிலையில், இது குறித்து அறப்போர் இயக்கம் வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இது குறித்து அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “மின்சார வாரியத்தில் பாலச்சந்தர் IAS நியமனத்தை அறப்போர் இயக்கம் கண்டிக்கிறது
பாலச்சந்தர் IAS அவர்களை தமிழ்நாடு மின்சார வாரிய விநியோக பிரிவின் இணை இயக்குனராக நியமித்ததை அறப்போர் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டு கையும் களவுமாக பிடிபட்ட ஒரு IAS அதிகாரியை பணியிடை நீக்கமாவது செய்திருக்க வேண்டும்.
டெண்டர் செட்டிங் செய்து, சிலைகளை நிறுவிய பிறகு அதற்கு டெண்டர் போட்ட அதிகாரியான பாலச்சந்தர் ஐஏஎஸ் ஏற்கனவே சீரழிந்த நிலையில் இருக்கக்கூடிய மின்சார வாரியத்தில் என்ன செய்வார்?? முதலமைச்சர் விஜய் அவர்கள் தொட்டவனை விட மாட்டேன் என்று சொல்வது இதுதானா?? அறப்போரின் தாம்பரம் மாநகராட்சி புகாரின் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன??
ஏற்கனவே மின்மாற்றி (transformer) ஊழலில் மற்றும் மின்கடத்தி (conductor)ஊழலில் விசாரிக்கப்படும் ராஜேஷ் லக்கானி IAS அவர்களை அதே மின்சார வாரியத்தின் இயக்குனராக நியமித்ததன் மூலமாக இந்த ஊழல்களின் மீதான நடவடிக்கையில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை நாம் இழந்து வருகிறோம்.
தற்பொழுது அறப்போர் வெளியிட்ட தாம்பரம் மாநகராட்சி முறைகேட்டின் டெண்டர் அதிகாரியான அப்போதைய தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் IAS அவர்களை மின்சார வாரியத்தில் இணை இயக்குனராக நியமித்ததன் மூலமாக இனி மின்சார வாரியம் மேலும் ஊழலில் சீரழிய வழிவகை செய்யப்பட்டுள்ளது!
அரசின் இந்த நியமனங்கள் குறித்து முதலமைச்சர் விஜய் அவர்களும் மற்றும் துறை அமைச்சர் நிர்மல் குமார் அவர்களும் என்ன விளக்கம் சொல்வார்கள்?? இரு நியமனங்களும் மின்சார வாரியத்தை மேலும் சீரமைக்குமா? அல்லது மேலும் சீரழிக்குமா? Justice must not only be done, but must also be seen to be done என்பதை முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறோம். இந்த இரு நியமனங்களையும் உடனடியாக தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என்று அறப்போர் இயக்கம் கோருகிறது என்று தெரிவித்துள்ளது”.

