ஸ்டார் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலினை வீழ்த்தி த.வெ.க வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி வாகையை சூடியிருக்கிறார்.
முதல்வர் ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் சுமார் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருக்கிறார்.
த.வெ.க வேட்பாளர் வி.எஸ். பாபு 82,997 வாக்குகள் பெற்று, முதல்வர் ஸ்டாலினை வீழ்த்தியிருப்பது திமுக-வில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

74,202 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார் ஸ்டாலின். இந்நிலையில் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் தோல்வி குறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” ஜனநாயக அரசியலில் தேர்தல் ஓர் அங்கம்தான். அருமை நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. ஸ்டாலின் அவர்கள் வெற்றியில் ஆர்ப்பரிப்பவரும் அல்ல. தோல்வியில் துவள்பவரும் அல்ல. மீண்டும் போராடுவார். மீண்டும் வெல்வார்” என்று பதிவிட்டிருக்கிறார்.