அதிமுகவின் தன் கோட்டையை மீண்டும் கைப்பற்றுமா?
பெருந்துறை தொகுதியைப் பொறுத்தவரை, கடந்த பல தேர்தல்களாக அதிமுகவுக்கு சாதகமான தொகுதியாகவே இருந்து வருகிறது. கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் வலுவான தொகுதிகளில் ஒன்றாக கருதப்படும் பெருந்துறையை, இடைத்தேர்தலில் எந்த சூழலிலும் கைநழுவ விடக்கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தாக்கம் குறித்து பரவலாக பேசப்பட்டபோதிலும், பெருந்துறை தொகுதியில் அக்கட்சியின் வேட்பாளர் மூன்றாவது இடத்தையே பெற்றிருந்தார். தற்போது அதே தொகுதியில் அதிமுகவின் முன்னாள் வேட்பாளர் ஜெயக்குமார், தவெக சார்பில் களமிறங்க உள்ளதால், போட்டி வேறு பரிமாணத்தை எட்டியுள்ளது.

ஜெயக்குமாருக்கு தொகுதியில் ஏற்கெனவே உள்ள அறிமுகம், தவெகவின் வாக்கு வங்கி ஆகியவற்றை எதிர்கொள்ள, அதிமுக சார்பில் தொகுதியில் நன்கு அறிமுகமான, ஏற்கெனவே தேர்தல் களத்தை சந்தித்த வேட்பாளரை நிறுத்துவது சாதகமாக இருக்கும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு கணக்குப் போடுவதாக கூறப்படுகிறது.
அதன் அடிப்படையிலேயே முன்னாள் திமுக வேட்பாளரான தோப்பு வெங்கடாச்சலத்தை அதிமுக பக்கம் கொண்டு வருவதற்கான முயற்சிகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், பெருந்துறை இடைத்தேர்தலில் ஒரே தொகுதியில் ஏற்கெனவே வெவ்வேறு கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட இரு முக்கிய அரசியல் பிரமுகர்கள், இந்த முறை கட்சி மாறி நேருக்கு நேர் மோதும் சூழல் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தோப்பு வெங்கடாச்சலம் அதிமுகவில் இணைவது மற்றும் அவரை வேட்பாளராக நிறுத்துவது தொடர்பான இறுதி முடிவு இன்னும் வெளியாகாத நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இந்த நகர்வு பெருந்துறை இடைத்தேர்தல் களத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.!