மேகதாது விவகாரம்: “தமிழ்நாட்டின் நீருரிமைக்கே அச்சுறுத்தல்; தவெக அரசு மௌனம் காக்கிறது!" – TRB ராஜா

Spread the love

கர்நாடக மாநிலம் மைசூரில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, கர்நாடகா முதல்வர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி முன்னிலையில் பேசிய அம்மாநில முதல்வர் டி.கே.சிவக்குமார், ” காவிரி அணையை நீங்கள் இப்போதுதான் பார்த்தீர்கள். மேக்கேதாட்டு அணை கர்நாடகாவில் கட்டப்பட வேண்டும் என்றும், அதை யாராலும் தடுக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த விஷயத்தில் நீங்கள் எங்களுக்குச் சட்டரீதியாக உதவ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்று பேசியிருந்தார். டி.கே.சிவக்குமார் பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்திருந்தார்.

டி.கே.சிவக்குமார்
டி.கே.சிவக்குமார்

இந்த நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தன் எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டத் தொடர்ந்து முயற்சித்து வரும் கர்நாடக முதலமைச்சர் சிவக்குமார் அவர்களின் நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம்! காவிரி என்ன கர்நாடகாவுக்கு மட்டுமே சொந்தமான நதியா! காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் திருத்தி உறுதிசெய்ததன்படி, பிலிகுண்டுலுவில் தமிழ்நாட்டிற்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி. நீர் கிடைப்பது சட்டப்பூர்வமான உரிமை!

மேகதாது அணையைக் கட்ட கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் எந்த நிபந்தனையற்ற அனுமதியையும் வழங்கவில்லை என்பதே உண்மை! காவிரி நீரின் மீது தமிழ்நாட்டின் சட்டரீதியான உரிமைகள் பலமாக உள்ளன. குறித்த காலத்தில் காவிரி நீர் கிடைக்காவிட்டால், காவிரி டெல்டா வின் லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிடும். பயிர்க்காலம் முடிந்த பிறகு வரும் தண்ணீரால் விவசாயிக்கு என்ன பயன்? தமிழ்நாட்டில் தவெக அரசின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ், கர்நாடகாவில் இந்த அணைத் திட்டத்தைத் தீவிரமாக முன்னெடுக்கிறது! ஆனால், தமிழ்நாட்டின் நீருரிமைக்கே அச்சுறுத்தலாக இருக்கும் இந்த விவகாரத்தில் தவெக அரசு மௌனம் காக்கிறது!

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

தமிழ்நாடு காங்கிரஸின் வாய்ச்சவடால் தலைவர்கள் தமிழ்நாட்டு விவசாயிகளின் பக்கம் நிற்பார்களா? கர்நாடகாவின் பக்கம் நிற்பார்களா? ராகுல் காந்தி அவர்களே, தமிழ்நாட்டின் காவிரி நீருரிமையைப் பாதிக்கக்கூடிய இந்தத் திட்டத்தை எதிர்ப்பீர்களா இல்லையா ! CM Sir, உங்கள் அரசியல் கூட்டணியைக் காப்பாற்றுவது முக்கியமா? தமிழ்நாட்டு விவசாயிகளின் எதிர்காலத்தைக் காப்பாற்றுவது முக்கியமா? எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இந்த பிரச்சினை குறித்து தனி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று கோரினார்.

இது சட்டமன்ற தீர்மானத்தில் திருத்தமாகவும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும், டெல்டா விவசாயிகளை முதலமைச்சர் நேரில் சந்திக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதை தவெக அரசு எப்போது செய்யப்போகிறது! மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் தமிழ்நாட்டின் விவசாயிகளின் நலனையும், எங்களது சட்டப்பூர்வமான காவிரி நீருரிமையையும் பாதுகாக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். தமிழ்நாட்டின் காவிரி நீருரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது!” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *