மேயர் பதவிக்கு குறி? அழகிரி மகளின் புதிய ரூட்! அதிரும் அறிவாலயம்..? – Kumudam

Spread the love

தமிழக அரசியல் வரலாற்றில் த.வெ.க. இடம்பிடித்துவிட்டதை ஜீரணிக்க முடியாமல் தி.மு.க. தவித்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் அழகிரியின் மகள் கயல்விழி தவெகவுக்கு ஆதரவாக களமிறங்கியிருப்பது, கருணாநிதியின் ரத்த உறவுகளை கொதிநிலைக்கு கொண்டுசென்றிருக்கிறது.

இந்த நிலையில் ‘அவர் மதுரை மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக களமிறங்கவே முதல்வர் விஜய்யை சந்திக்க தலைமைச் செயலகம் வந்தார்’ என்கிற செய்தி காட்டுத்தீயாக பரவிவருகிறது.

இதுகுறித்து அழகிரி ஆதரவாளர்களிடம் பேசினோம், “1980ல் மதுரை வந்த அழகிரி, திமுகவுக்காக பங்காற்றியதை யாரும் மறுக்க முடியாது. 2009 திருமங்கலம் இடைத்தேர்தலில் திருமங்கலம் ஃபார்முலாவை உருவாக்கி தி.மு.க.வை வெற்றிபெற வைத்தார் அழகிரி. தொடர்ந்து அவருக்கு தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவி கிடைத்தது. தி.மு.க. ஆளும்கட்சியாக இருந்தபோது ஸ்டாலின் மற்றும் அழகிரி இடையே அரசியல் பகை உச்சத்தை எட்டியது. 

அழகிரி ஆதரவாளர்கள், ”இது எங்க ஏரியா உள்ளே வராதே” என்று போஸ்டர் ஒட்டினார்கள்.  அதன்பிறகு கட்சியின் கட்டுப்பாட்டை மீறி அழகிரி செயல்பட்டதாக கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்து 2014ம் ஆண்டு முரசொலியில் அறிக்கை வெளியிட்டார் பொதுச்செயலாளர் அன்பழகன்.

தி.மு.க.வில் மீண்டும் அழகிரியையும் அவரின் ஆதரவாளர்களையும் சேர்க்க வேண்டும் என்று கட்சியின் தலைமைக்கு கருணாநிதி உயிருடன் இருக்கும்போதே அவரின் ஆதரவாளர் இசக்கி முத்து கடிதம் எழுதினார். இந்த நிலையில் கருணாநிதியின் இறப்புக்குப் பிறகு கட்சியின் தலைவரானார் ஸ்டாலின். அதன்பிறகும் அழகிரி ஆதரவாளர்கள் பல முறை கட்சியின் தலைமைக்கு கடிதம் எழுதினார்கள். அழகிரி தன் மகன் துரைக்கு இளைஞரணியில் பதவி கேட்டுப் பார்த்தார். எந்த சிக்னலும் கிடைக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த அழகிரி, உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள தன் மகன் துரை தயாநிதியை முழுமையாக சரி செய்வதில் மட்டுமே கவனம் செலுத்திவருகிறார்.

2021ம் ஆண்டு தி.மு.க ஆட்சி அமைந்தது. உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்றதும் மதுரை வந்து தன் பெரியப்பா அழகிரியிடம் ஆசிபெற வந்தபோதுகூட ‘என் ஆதரவாளர்களை மட்டுமாவது கட்சியில் சேர்த்துக்கொள்ள சொல்லுப்பா’ என்றார். மறுபடியும் பல்வேறு முயற்சிகள். அனைத்தும் தோல்வியடைந்ததால் பொறுமையிழந்த அழகிரியின் ஆதரவாளர்கள் மன்னன், எஸ்ஸார் கோபி உள்ளிட்டோர் அ.தி.மு.கவில் ஐக்கியமானார்கள்.

2026 சட்டமன்றத் தேர்தலின்போது அழகிரியின் மகள் கயல்விழி, ‘தி.மு.க.வில் என் அப்பாவிற்கு எந்த பதவியும் இல்லை. அவர் ரொம்ப வருத்தத்தில் இருக்கிறார்’ என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றபோது அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் கயல்விழி. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கயல்விழி, ‘ஒரு புதிய வரலாற்றை முதல்வர் ஜோசப் விஜய் படைத்திருக்கிறார். மகிழ்ச்சியாக இருக்கிறது. மென்மேலும் அவர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். ஓர் இளைஞர் ஆட்சிக்கு வந்திருக்கிறார். அவர் மக்களுக்கு நல்லது செய்வார் என நூறு சதவீதம் நம்பிக்கை இருக்கிறது’ என புகழ் பாடினார்.

அழகிரி 15 ஆண்டுகளாக அமைதியாக இருந்துவரும் நிலையில், அவரின் மகள் கயல்விழி த.வெ.க.வில் இணைய ஆர்வம் காட்டுவதற்கு பின்னால் வேறொரு அரசியல் கணக்கு இருக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

அதாவது சமீபத்தில் கயல்விழி தலைமைச் செயலகம் சென்று முதல்வர் விஜய்யை சந்தித்து, த.வெ.க.வில் இணைய முயற்சித்தார். ஆனால் முதல்வர் இவரை சந்திக்க முடியாததால் அங்கிருந்த முக்கிய அமைச்சர்களுடன் பேசிவிட்டு திரும்பிவிட்டார் என்று தகவல்கள் கசிந்தன. ஆனால், அழகிரி மத்திய அமைச்சராக இருந்தபோது அவருக்கு பி.ஆர்.ஓ.வாக வலம் வந்த பாஸ்கரன் தலைமைச் செயலகம் வந்த கயல்விழியை விஜய்யை சந்திக்கவிடாமல் அழகிரிக்கு போன் போட்டதாக கூறப்படுகிறது. அவர் உடனே கயலை வீட்டிற்கு அனுப்பிவை என்று சொன்னதாகவும் கூறப்படுகிறது.

ஆனாலும் தவெகவில் இணைவதில் கயல்விழி உறுதியாக இருக்கிறார் என்கிறார்கள். த.வெ.க.வில் இணைந்து மதுரை மாநகராட்சியின் மேயராக வலம் வரவேண்டும் என்பதுதான் அவரின் ஆசை. இந்த நிலையில் ‘திமுகவில்தான் நமக்கு செல்வாக்கு இல்லை. நீ அரசியல் பிரவேசம் எடுப்பது உன் விருப்பம்’ என அழகிரி சொல்லிவிட்டாராம். இனி த.வெ.கவை நோக்கியே கயல்விழியின் அரசியல் பயணம் இருக்கும்” என்கிறார்கள் அவரது நெருங்கிய வட்டாரங்கள்.

இதுகுறித்து அழகிரி ஆதரவாளர்களோ, “கயல்விழி த.வெ.கவில் இணைந்த பிறகு பேட்டி கொடுப்பார். இன்னும் த.வெ.க.வில் அவர் இணையவில்லை. அதற்குள் பத்திரிகையில் இல்லாத விஷயங்களை எழுதிவருகிறார்கள். கட்சியில் இணைந்த பிறகு பேட்டி கொடுப்பார்” என்றார்கள்.

தந்தையின் அரசியல் வாழ்க்கை வெற்றி பெறவில்லை. அவரின் மகளின் முயற்சி வெற்றி பெறுமா?

 

–        பாலா

 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *