பீகார் தலைநகர் பாட்னாவில் நேற்று (அக். 25) முன்னாள் முதலமைச்சர் கிருஷ்ண சிங்கின் 139-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பேச்சு, தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விழாவில் கார்கே பேசியதாவது:
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் தொடர்பாக மத்திய பாஜக அரசையும், முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தேர்தல் ஆணையத்தையும் விமர்சித்துப் பேசினார். தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் சிறைக்குச் செல்வார்கள் என்றும் அவர் கூறினார்.
அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர், “Modi nahi jayega” (மோடி போகமாட்டார்) என்று உரக்கக் கூறினார். இதைக் கேட்ட கார்கே, அந்த நபர் மோடிக்கு ஆதரவாகப் பேசுவதாகக் கருதி, “Modi ka baap bhi jayega” என்று ஆவேசமாகப் பேசினார். அதாவது, “மோடி என்ன, அவரது அப்பனாக இருந்தாலும் போய்த்தான் ஆக வேண்டும்” என்று ஆவேசமாக பேசியிருந்தார்.
கார்கேவின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.
அமித் ஷா, நிதின் நபின் கண்டனம்!
கார்கேவின் பேச்சுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் மறைந்த தந்தையைப் பற்றி அவதூறாகப் பேசியதன் மூலம் கார்கே அரசியல் நாகரிகத்தின் அனைத்து எல்லைகளையும் மீறிவிட்டதாக அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார். மோடியையும் அவரது குடும்பத்தினரையும் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து அவமதித்து வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினும் கார்கேவின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்ததுடன், காங்கிரஸ் கட்சி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், கார்கேவின் பேச்சைக் கண்டித்து இன்று நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது.
குறுக்கிட்ட நபர் பாஜக ஆதரவாளரா? யார் அவர்?
கார்கே பேசிக்கொண்டிருந்தபோது குறுக்கிட்ட நபரின் பெயர் சந்தோஷ் குமார். இவர் பீகாரின் சாப்ரா பகுதியைச் சேர்ந்தவர். கூட்ட அரங்கிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சந்தோஷ் குமார், “நான் காங்கிரஸ் கட்சியின் தீவிரத் தொண்டர். மக்கள் பெரிய அளவில் கிளர்ந்தெழுந்தால்தான் மோடியை ஆட்சியிலிருந்து அகற்ற முடியும்.
அப்படியொரு மக்கள் எழுச்சி இல்லாமல் மோடி போகமாட்டார் என்றுதான் கூற முயன்றேன். ஆனால், நான் பேசி முடிப்பதற்குள் என்னுடைய வார்த்தைகளைத் தவறாகப் புரிந்துகொண்டனர். நான் மோடிக்கு ஆதரவாகப் பேசவில்லை. காங்கிரஸ் தொண்டர்கள் என்னைப் பாஜக ஆதரவாளர் எனத் தவறாக நினைத்துத் தாக்கிவிட்டனர்” என்று தெரிவித்தார்.
சந்தோஷ் குமார் தன்னைக் காங்கிரஸ் தொண்டர் என்று கூறியபோதிலும், பீகார் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் ராம், அவர் பாஜகவுக்கு ஆதரவாகப் பேசியதாகக் கூறியுள்ளார்.
அதேநேரத்தில், கார்கே பயன்படுத்தியது பேச்சுவழக்கில் இடம்பெறும் ஒரு சொற்றொடர்தான் என்றும், மோடியின் குடும்பத்தினரை அவமதிக்கும் நோக்கம் அவருக்கு இல்லை என்றும் காங்கிரஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

