யார்னு தெரியாதவர்களுடன் இந்தியாவில் சோலோ பயணம்! பிரேசில் பெண்ணுக்கு கிடைத்த வித்தியாசமான அனுபவம்! | Brazilian Solo woman tourist In India, Ariane Shares Unforgettable Pushkar Desert Camping Experience

Spread the love

India

oi-Vigneshkumar

ராஜஸ்தான்: இந்தியாவுக்கு சுற்றுலா வந்த பிரேசில் நாட்டை சேர்ந்த கன்டென்ட் கிரியேட்டர் அரியானே, ராஜஸ்தானின் புஷ்கரில் தனக்கு கிடைத்த வித்தியாசமான அனுபவங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். கடந்த நவம்பர் 3ஆம் தேதி முதல் புஷ்கரில் சுற்றி பார்த்து வரும் அவர், அங்கு சமீபத்தில் அறிமுகமானவர்களுடன் பாலைவனத்தில் முகாமிட்ட அனுபவம், கல்பேலியா பெண்களுடனான நடனம் என பல வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியா வரும்போது அவர்களுக்கு ஒருவித தயக்கம் எப்போதுமே இருக்கும். அதிலும் குறிப்பாக பெண் சுற்றுலா பயணிகள் வரும்போது இருக்கும். சிலர் வேண்டும் என்றே இந்தியா பாதுகாப்பற்ற நாடு என்று செய்யும் பொய்யான பிரச்சாரமும் இதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. இதற்கிடையே அந்த பொய் பிரச்சாரத்தை உடைக்கும் வகையில் இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது.

Brazilian Solo woman tourist In India

பிரேசில் சுற்றுலா பயணி

இந்தியாவுக்கு சுற்றுலா வந்த பிரேசில் நாட்டை சேர்ந்த கன்டென்ட் கிரியேட்டர் அரியானே தனது இந்திய பயணம் குறித்த வீடியோகர்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். ராஜஸ்தானை சுற்றி பார்க்க தொடங்கிய அரியானே, புஷ்கர் ஒட்டக திருவிழாவின்போது தனக்கு கிடைத்த எதிர்பாராத அனுபவத்தை விவரித்துள்ளார். புஷ்கர் ஒட்டக திருவிழா சென்ற அரியானே, முன்பின் தெரியாத நபர்களுடன், அதாவது அன்றைய தினம் தான் அவர்களை சந்தித்துள்ளார். இருந்த போதிலும் அவர்களுடன் சேர்ந்து தார் பாலைவனத்தில் கூடாரம் அமைத்து இரவு தங்கியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “தெரியாதவர்களுடன் பயணம் செய்யக்கூடாது என்று எப்போதும் சொல்வார்கள். ஆனால், இந்தியாவில் இதுவே எனக்கு கிடைத்த மிக சிறந்த நினைவுகளில் ஒன்றாக மாறும் என்று எதிர்பார்க்கவில்லை. இவர்களை இன்று தான் சந்தித்தேன். அவர்களுடன் தான் புஷ்கர் ஒட்டக திருவிழாவில் பாலைவனத்தில் முகாமிட்டோம். சில நேரங்களில் முன்கூட்டியே திட்டமிடாத பயணங்கள்தான் மறக்க முடியாதவையாக மாறுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

சூடான டீ

அங்கு ஒருவர் அவருக்கு பாரம்பரிய மண் குவளையில் சூடான டீ வழங்கியதும் அதை இவர் ருசித்து குடிப்பதும் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. புதிய மனிதர்களுடன் ஏற்பட்ட நட்பும், பாலைவன இரவின் அனுபவமும் அவருக்கு மறக்க முடியாத நினைவாக மாறியுள்ளன.

புஷ்கர் பயணத்தில் கல்பேலியா பெண்களை சந்தித்ததும் அரியானேவை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அவர்களை பற்றி பேசிய அரியானே, “அவர்களுடைய கண்களில் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது. அவர்களின் கண்களை பார்க்கும்போது ஆன்மாவுக்குள் பார்ப்பதை போலவும், பல தலைமுறைகளின் கதைகள், வரலாறு, வலிமையை பார்ப்பது போலவும் இருக்கிறது. அவர்களை பார்த்தாலே அவ்வளவு அழகாக இருக்கிறார்கள். என்னால் அதை வார்த்தைகளில் விவரிக்க முடியவில்லை” என பதிவிட்டுள்ளார்.

இந்திய பயணம்

இதுபோல தனது இந்திய பயணம் தொடர்பாக அவர் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு வீடியோவில் ராஜஸ்தானின் பாரம்பரிய உடைகளான காக்ரா சோலி, சேலை அணிந்து அரியானே உள்ளூர் மக்களுடன் நடனமாடுகிறார். மருதாணி வைத்துக்கொள்வது, உணவு சமைப்பது, உள்ளூர் உணவுகளை சுவைப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. சுற்றுலா பயணியாக மட்டும் இல்லாமல், அங்குள்ள மக்களுடன் இணைந்து அவர்களின் கலாச்சாரத்தையும் வாழ்க்கை முறையையும் அனுபவித்துள்ளார்.

நெட்டிசன்கள்

அரியானேவின் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளன. இது தொடர்பாக நெட்டிசன்கள், “உங்கள் வாழ்க்கையைப் பார்த்து பொறாமையாக இருக்கிறது” என்றும் “உங்கள் மூலம் ரியல் இந்தியாவை பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். புஷ்கர் திருவிழாவில் அரியானேவை நேரில் சந்தித்த ஒருவர், அவருடன் நேரம் செலவிட்டது சிறந்த அனுபவமாக இருந்ததாகவும் மீண்டும் சந்திக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *