ரத்தன் டாடாவின் நம்பிக்கை தளபதி.. TCSஸை வளர்த்தெடுத்த தமிழர்.. டாடா சன்ஸ் சந்திரசேகரன் ராஜினாமா ஏன்? | N Chandrasekaran Resigns as Tata Sons Chairman: Who Is He? Why Did He Step Down? All things to know

Spread the love

Business

oi-Vigneshkumar

சென்னை: இந்தியாவின் மிக பெரிய தொழில் குழுமங்களில் ஒன்றான டாடா குழுமத்தின் வளர்ச்சி பயணத்தில் முக்கிய பங்கு வகித்தவர்களில் ஒருவர் என். சந்திரசேகரன். ரத்தன் டாடாவின் நம்பிக்கைக்குரிய தளபதியாக இருந்த சந்திரசேகரன் சுமார் கடந்த 10 ஆண்டுகளாக டாடா சன்ஸ் குழுமத்தை வழிநடத்தினார். இந்தச் சூழலில் தான் அவர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். யார் இந்த சந்திரசேகரன்.. இவரது பின்னணி என்ன.. இப்போது ராஜினாமாவுக்கு என்ன காரணம் என்பது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!

இன்றைய காலகட்டத்தில் இளம் தலைமுறையினர் அடிக்கடி நிறுவனங்களை மாற்றி கொண்டே இருப்பார்கள். ஆனால், சந்திரசேகரன் சுமார் 40 ஆண்டுகளாக டாடா நிறுவனங்களில் தான் தொடர்ந்து வேலை செய்து வருகிறார். திறமை, தொடர்ச்சியான கற்றல், டாடா மீதான நம்பிக்கை ஆகியவையே அவரது வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தன.

Tata Songs Chandrasekaran Resigns Chandrasekaran

தமிழர்

சந்திரசேகரன் தமிழ்நாட்டில் ஒரு எளிய குடும்ப பின்னணியில் பிறந்து வளர்ந்தார். சிறு வயதிலேயே உழைப்பு, நேர்மை மற்றும் ஒழுக்கம் போன்றவற்றை அவரது குடும்பத்தினர் சொல்லி கொடுத்து வளர்த்துள்ளனர். 1963ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். விவசாயக் குடும்பத்தில் வளர்ந்த இவர், உள்ளூர் அரசுப் பள்ளியில் பயின்றார்.

கல்வியில் சிறந்து விளங்கிய இவர், கோவை தொழில்நுட்ப கல்லூரியில் அப்ளைட் சயின்ஸ் இளங்கலைப் பட்டமும், பின்னர் திருச்சியில் பொறியியல் கல்லூரியில் எம்சிஏ பட்டமும் பெற்றார். அதாவது இந்தியாவின் ஐடி துறை சர்வதேச சந்தையில் மிக பெரிய சக்தியாக மாறுவதற்கு முன்பே, கம்யூட்டர் துறையில் தனது வாழ்க்கையை தொடங்கியவர் சந்திரசேகரன்.

டிசிஎஸ்

1987ஆம் ஆண்டு டிசிஎஸ் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக சந்திரசேகரன் தனது தொழில் வாழ்க்கையை தொடங்கினார். அப்போது டிசிஎஸ், இன்று இருப்பதை போல உலகளவில் மிக பெரிய ஐடி நிறுவனமாக வளர்ந்திருக்கவில்லை. சிறிய கம்பெனி தான். ஆனால், அதில் தீவிரமாக உழைத்த சந்திரசேகரன் குறுகிய காலத்தில் தொழில்நுட்பம், செயல்பாட்டு திறன் மற்றும் நிறுவன வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தினார். உழைப்பிற்கு ஏற்ற பலன்களும் அவருக்கு கிடைத்தது. பல புதிய பொறுப்புகள் சந்திரசேகரனுக்கு தரப்பட்டது.

சீரான வளர்ச்சி

அவரது வளர்ச்சி திடீரென நிகழ்ந்ததல்ல. பல ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் பணியாற்றி, தனது திறமையை நிரூபித்து வந்ததன் காரணமாகவே அவருக்கு உயர் பொறுப்புகள் வழங்கப்பட்டன. 2009ஆம் ஆண்டு சந்திரசேகரன் டிசிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றார். அவரது தலைமையின் கீழ் டிசிஎஸ் மிக பெரிய அளவில் வளர்ந்தது. உலக ஐடி சந்தையில் கடுமையான போட்டி, பொருளாதார ஏற்ற இறக்கங்கள் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள் இருந்தபோதிலும், நிறுவனத்தின் வளர்ச்சியை தொடர்ந்து முன்னெடுத்தார்.

அவரது தலைமையில் டிசிஎஸ் ஆண்டுக்கு 20 பில்லியன் டாலருக்கும் அதிகமான வருவாயை கடந்தது. உலகின் பல்வேறு நாடுகளில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தியது. கிளவுட் அனாலடிக்ஸ் மற்றும் ஏஐ போன்ற புதிய தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தியது. சர்வதேச வாடிக்கையாளர்களுடனான நீண்டகால உறவுகளை வலுப்படுத்தியது. அவரது தலைமையில் டிசிஎஸ் மிக பெரிய அளவில் வளர்ந்தாலும் நிறுவனத்தின் அடிப்படை நிலைத்தன்மை இழக்காமல் பார்த்து கொண்டார்.

டிசிஎஸின் வெற்றி

2017ஆம் ஆண்டு சந்திரசேகரனுக்கு மிகப்பெரிய பொறுப்பு கிடைத்தது. டிசிஎஸ் நிறுவனத்தை அவர் வெற்றிகரமாக வழிநடத்தியதால் அவருக்கு டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பு கிடைத்தது. இதன் மூலம் டாடா குழுமத்தில் சாதாரண நிறுவனத்தில் வேலையை தொடங்கி டாடா சன்ஸ் தலைவராக உயர்ந்த முதல் நபர் என்ற சிறப்பை பெற்றார்.

சந்திரசேகரன் தொழில்நுட்ப பின்னணி கொண்டவர். ஆனால் டாடா குழுமம் ஐடி, ஸ்டீல், ஆட்டோமொபைல், மின்சாரம், சில்லறை விற்பனை என பல்வேறு துறைகளில் செயல்பட்டு வருகிறது. எனவே, சந்திரசேகரன் இந்த டாடா குழுமத்தை எப்படி வழிநடத்துவார் என்ற கேள்வி வந்தது. ஆனால், அதிலும் அவர் சிறப்பாகவே வேலை செய்து வந்துள்ளார்.

டாடா சன்ஸ்

டாடா சன்ஸ் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, சந்திரசேகரன் டாடா குழும நிறுவனங்களின் கட்டமைப்பை எளிமைப்படுத்தினார். அவரது தலைமையில் தான் ஏர் இந்தியா மீண்டும் டாடா வசம் வந்தது. மேலும், டாடா மோட்டர்ஸ் மின்சார வாகனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது. அதில் ஓரளவுக்கு வெற்றியையும் பதித்தது. செயற்கை நுண்ணறிவு, டேட்டா மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களில் முதலீடுகள் அதிகரிக்கப்பட்டன. அதேநேரம் டாடா டிஜிட்டல், டாடா நியூ உள்ளிட்டவற்றில் அவர்களின் முயற்சிக்கு பெரிய வெற்றி கிடைக்கவில்லை. அதேபோல ஏர் இந்தியா விபத்தை டாடா கையாண்ட விதமும் இன்று வரை விமர்சிக்கப்படுகிறது.

சந்திரசேகரன் பொதுவாக அதிக விளம்பரத்தை விரும்பாத, அமைதியான தலைவராக அறியப்படுகிறார். சந்திரசேகரனின் வருமானம் அவரது நீண்டகால கார்ப்பரேட் வாழ்க்கையுடன் தொடர்புடையது. டாடா சன்ஸ் தலைவராக அவருக்கு கிடைத்த மொத்த ஊதியம் சுமார் ரூ.155 கோடி என தகவல்கள் வெளியாகின. அவருக்கு சம்பளமாக குறிப்பிட்ட தொகையும் லாபத்தில் ஒரு பங்கு என்று இன்னொரு தொகையும் வருமானமாக கிடைக்கிறது.

ராஜினாமா ஏன்

மறைந்த ரத்தன் டாடாவின் நம்பிக்குரிய நபராக சந்திரசேகரன் இருந்தார். ரத்தன் டாடா தான் இவருக்கு பல பொறுப்புகளை வழங்கியிருந்தார். அதேநேரம் ரத்தன் டாடா மறைவுக்கு பிறகு டாடா குழுமம் அவரது சகோதரரான நியோல் டாடா வசம் சென்றது. நியோல் டாடாவின் ஸ்டைலுக்கும் சந்திரசேகரன் ஸ்டைலுக்கும் செட் ஆகவில்லை. பல விஷயங்களில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தன. சில மாதங்களாகவே சந்திரசேகரன் மீது நியோல் டாடா அதிருப்தியில் இருந்ததாக தகவல்களும் வெளியானது. இந்தச் சூழலில் தான் அவரது ராஜினாமா குறித்து இப்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

பல கோடி இளைஞர்களை போல ஒரு சாப்ட்வேர் இன்ஜினியராக டிசிஎஸ் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த சந்திரசேகரன், பல ஆண்டுகள் அதே நிறுவனத்தில் பணியாற்றி ஒரு கட்டத்தில் அந்த நிறுவனத்தை மட்டுமின்றி, அதன் தாய் நிறுவனமான டாடா குழுமத்தையும் வழிநடத்தியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *