ராணிப்பேட்டை 15 ஏக்கர் நிலம்.. பத்திரப்பதிவு செய்து கொடுத்தவர்களே இப்படியா? சிக்கிய 2 புள்ளிகள் | Ranipet 15 Acre Land Fraud, 2 Brokers Arrested for Selling Chennai Woman’s Property Using Fake Aadhaar Documents

Spread the love

Tamilnadu

oi-Hema Vandhana

ராணிப்பேட்டை: சென்னையைச் சேர்ந்த பெண்ணுக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலம், போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்ட சம்பவம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நில மோசடி சம்பவங்கள் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில், இந்த சம்பவத்தில் 2 இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். என்னதான் நடந்தது ராணிப்பேட்டையில்?

நில மோசடி சம்பவங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. போலி சான்றிதழ்கள், போலி ஆவணங்களை தயாரித்து அடுத்தவர் சொத்துகளை அபகரிக்கும் சம்பவங்களும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

Ranipet

நில அபகரிப்பு சம்பவங்கள்

நேற்றுகூட, கிருஷ்ணகிரியில் உயிருடன் இருக்கும் மூதாட்டி இறந்துவிட்டதாக போலி சான்றிதழ் தயாரித்து, அவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை அபகரித்ததாக புகார் எழுந்தது. பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தனது நிலத்தை மீட்டுத் தர வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மூதாட்டி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீருடன் மனு அளித்துள்ளார்.

இதேபோல், 2 நாட்களுக்கு முன்பு சென்னை ஆவடி பகுதியில் ரூ.15 கோடி மதிப்புள்ள பூர்வீக நிலத்தை போலி இறப்பு மற்றும் வாரிசுச் சான்றிதழ்கள் மூலம் அபகரிக்க முயன்ற சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.. இந்த சம்பவங்கள் நடந்து சில நாட்களே ஆன நிலையில், தற்போது ராணிப்பேட்டையிலும் மற்றொரு நில மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ராணிப்பேட்டை 15 ஏக்கர் நிலம்

சென்னையை சேர்ந்த மலர் என்பவருக்கு ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த அத்தியானம் கிராமத்தில் சுமார் 15 ஏக்கர் நிலம் உள்ளது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தனது நிலத்தை பார்வையிட மலர் அங்கு சென்றுள்ளார். அப்போது தனது நிலத்தில் வேறு சிலர் வசித்து வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கலவை சார்பதிவாளர் அலுவலகத்தில் விசாரித்தபோதுதான், அவரது நிலம் பல்வேறு நபர்களின் பெயர்களில் பத்திரப்பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

போலி ஆவணங்கள்

இதையடுத்து தனது நிலத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, நிலத்தை மீட்டுத் தருமாறு ராணிப்பேட்டை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசில் மலர் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அத்தியானம் கிராமத்தைச் சேர்ந்த இடைத்தரகர்களான மதிவாணன் (58), பார்த்திபன் (52) ஆகிய இருவருக்கும் இந்த மோசடியில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

அதாவது, கடந்த 2019-ம் வருடத்தில், மலரின் நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொடுத்தவர்கள் இந்த 2 பேரும்தானாம். இதையே சாக்காக 2 பேரும் பயன்படுத்திக் கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.

2 பேர் கைது

போதாக்குறைக்கு மலர் சென்னையில் வசிப்பதும், இவர்களுக்கு வசதியாக போய்விட்டது.. அதனால் மலரிடமிருந்து ஏற்கனவே பெற்ற ஆவணங்களுடன், போலி ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களையும் இவர்களே தயாரித்துள்ளனர். இதன் மூலம் சுமார் 15 ஏக்கர் நிலத்தையும் பிரித்து பல்வேறு நபர்களுக்கு விற்பனையும் செய்துள்ளனர்..

இவ்வளவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, மதிவாணன், பார்த்திபன் ஆகிய இருவரையும் கலவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த மோசடியில் போலி ஆவணங்கள் தயாரிக்க வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா, நிலத்தை வாங்கியவர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்…!!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *