“ரூல்ஸ Follow பண்ணித்தான் ஆகணும்…” – DKS முன் கர்ஜித்த விஜய்..! – Kumudam

Spread the love

தென் மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்று, மாநிலங்களுக்கு இடையேயான முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கேரள முதலமைச்சர் சதீஷன், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இதனிடையே, தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக தெலுங்கானா துணை முதலமைச்சர் மல்லு விக்ரமார்கா கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். அதேபோல், புதுச்சேரி யூனியன் பிரதேச முதலமைச்சர் ரங்கசாமியும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

தென் மாநிலங்களின் வளர்ச்சி, மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு மற்றும் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த மாநாட்டில் பேசிய முதலமைச்சர் விஜய், காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அனைத்து தரப்பினரும் மதிக்க வேண்டும் என்றும், காவிரி மேலாண்மை அமைப்பின் உத்தரவுகள் முறையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சினைகளுக்கு சட்டரீதியான தீர்வுகளை மதிப்பதே கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்தும் என்ற அடிப்படையில் முதலமைச்சர் விஜய்யின் பேச்சு அமைந்திருந்தது.

இதுதவிர, போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாட்டை கட்டுப்படுத்த தென் மாநிலங்கள் இணைந்து செயல்படும் வகையில் ஒருங்கிணைந்த அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். பெங்களூரு மெட்ரோ ரயில் சேவையை ஓசூர் வரை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.

தமிழ்நாட்டின் கல்வி சார்ந்த கோரிக்கைகளையும் மாநாட்டில் விஜய் முன்வைத்தார். நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும், பிளஸ் 2 மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அதேபோல், ஆன்லைன் மருந்து விற்பனையை முறைப்படுத்துதல், கடல்சார் பொருளாதாரத்துக்கான புதிய திட்டமிடல், தென் மாநிலங்களுக்கு நிதி செலவினத்தில் கூடுதல் சுயாட்சி, கடலோர பாதுகாப்பை வலுப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளையும் விஜய் முன்வைத்தார்.

மேலும், தொகுதி மறுவரையறை நடவடிக்கையில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவின் நிலைப்பாடு தொடர்ந்து சர்ச்சையாக உள்ள நிலையில், டி.கே.சிவக்குமார் மேகதாதுவை கட்டியே தீர வேண்டும் என்று இந்த மாநாட்டில் கூறியதும், காவிரி தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்க வேண்டும் என விஜய் கூறியதும் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. 

இப்படி ஒரே மேடையில் மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சரும்ம் கர்நாடக முதலமைச்சரும் மாறி மாறி சூசகமாக தங்கள் நிலைப்பாட்டை கூறியுள்ளது, இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்க வாய்ப்பே இல்லை என்பதை நிரூபிப்பதாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *