தமிழக முதல்வரின் சிறப்பு அரசியல் செயலாளர் என்கிற பதவிக்கு த.வெ.க-வின் செய்தி தொடர்பாளரும், முதல்வர் விஜய் அவர்களின் ஆஸ்தான ஜோதிடருமான ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமனம் செய்யப்படுவதாக தமிழக அரசின் முதன்மை செயலாளர் அறிவித்துள்ளார்.
இந்த நியமனம் பலருக்கு ஆச்சர்யத்தை கொடுத்திருக்கிறது. அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளவர்களுகே இதுவரை துறைகள் ஒதுக்கீடு நடக்கவில்லை, துறைக்கான அதிகாரிகள் நியமனமும் இன்னும் நடக்கவில்லை. ஆனால், இவ்வளவு முன்னுரிமை கொடுத்து எதற்காக இந்த நியமனம் நடந்தது என்கிற கேள்வி எல்லோரிடமும் எழுந்துள்ளது.
அதே நேரம் “விஜய் முதல்வராக வருவார், அவருக்கான ஜாதக அமைப்பு பலமாக உள்ளது’ கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சொல்லி வந்தவர் ராதன் பண்டிட். அதோடு, “விஜய் அவர்களுக்கு ஆன்மீக ரீதியான அனைத்து ஆலோசனைகளை கடந்த சில ஆண்டுகளாக சொல்லிவந்தவர் ராதன் பண்டிட். அவரின் ஆலோசனைபடியும் விஜய் ஒவ்வொரு மூவ்வையும் செய்துவந்தார். அது இப்போது ஒர்க் அவுட்டாகிவிட்டதால் அவருக்கு பிரதிபலனாக அரசு பதவி வழங்கியிருக்கிறார்” என்கிறார்கள் த.வெ.கவினர்.

சரி, அரசு பதவி வழங்கும் அளவுக்கு ராதன் பண்டிட் முக்கியதும் பெற்றது எப்படி? எங்கிருந்து இவரது பயணம் ஆரம்பித்தது என்கிற விசாரணையில் நாம் இறங்கினோம். பல சுவாரசியமான பக்கங்களை கொண்டதாக உள்ளது வெற்றிவேல் என்னும் ராதன் பண்டிட் கதை.
“ரிக்கி ராதன் பண்டிட் என்று வட இந்திய பாணியில் இவருடைய பெயர் இருந்தாலும் இவரது உண்மையான பெயர் வெற்றிவேல் என்பதே. திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தான் இவருடைய சொந்த ஊர். முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக அந்த பகுதியில் சிறிய ஜோதிடராக இவருடைய பயணம் ஆரம்பித்துள்ளது.
ஜாதகம் பார்த்து அவர்களுக்கான பலனை நோட்டில் எழுதிக்கொடுத்து, இது நடக்கவில்லை என்றால் வந்து கேளுங்கள் என சவால் விடுவாராம். ஆரம்பத்தில் இவருடைய ஜோதிடம் பெரிய அளவில் எல்லாம் பேசு பொருளாக இல்லை. 96-ல் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க படு தோல்வியடைந்து போது, அ.தி.மு.க வினர் பலரும் கடும் மன உளைச்சலில் இருந்தனர்.