Partner Content
oi-Vignesh Selvaraj
டெல்லி: இந்தியாவின் முன்னணி தொழில் குழுமங்களில் ஒன்றான அதானி குழுமம் சொந்தமாக விமான சேவைத் தொழிலில் இறங்கத் திட்டமிட்டுள்ளதாகச் வெளியான தகவல்களை அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனம் உறுதியாக மறுத்துள்ளது.
அதானி குழுமம் சார்பில் அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், ஒரு விமான நிறுவனத்தைத் தொடங்குவதற்கு எங்கள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகப் பரவி வரும் செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் உண்மைக்குப் புறம்பானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அதானி எண்டர்பிரைசஸ் ஒரு விமான நிறுவனத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறி அண்மையில் வெளியாகியுள்ள ஊடக செய்திகள் மற்றும் மார்க்கெட் யூகங்களை நாங்கள் திட்டவட்டமாக மறுக்கிறோம். இந்த அறிக்கைகள் முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் உண்மைக்கு மாறானவை” என்று அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
தற்போது அதுபோன்ற எந்தவொரு திட்டமும் பரிசீலனையில் இல்லை என்றும் அதானி நிறுவனம் மேலும் தெளிவுபடுத்தியுள்ளது. “விமான சேவைத் தொழிலில் நுழைவதற்கான எந்தவொரு திட்டத்தையும் அதானி எண்டர்பிரைசஸ் பரிசீலிக்கவில்லை” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையங்கள், ஆற்றல் துறை, உள்கட்டமைப்பு மற்றும் லாஜிஸ்டிக்ஸ் ஆகியவற்றில் அதானி குழுமத்தின் பங்களிப்பு தொடர்ந்து விரிவடைந்து வருவதைத் தொடர்ந்து, அக்குழுமம் விமானச் சேவையிலும் தடம் பதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து வணிக மற்றும் நிதி வட்டாரங்களில் பேச்சுகள் அதிகரித்து வந்த நிலையில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்தச் சமீபத்திய அறிக்கையின் மூலம், ஒரு புதிய விமான சேவை நிறுவனத்தைத் தொடங்குவதற்கான எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தி, பரவி வந்த ஊகங்களுக்கு அதானி குழுமம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட், விமான நிலையங்கள், சுரங்கம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், டேட்டா சென்டர்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பல துறைகளில் தொடர்ந்து இயங்கி வருகிறது.