வெளியில் மழை… What to Do! – சுவாரஸ்ய நினைவலைகள்

Spread the love

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

வெளியில மழை பெய்தால் நாம் என்ன செய்வோம்…? வீடோ, அலுவலகமோ, மாலோ எதுவாக இருந்தாலும் அங்கேயே அடைந்து கிடக்க வேண்டியிருக்கும் மழை விடும் வரையில். சாலையில் நடக்கும் போது மழை வந்தால் ஒதுங்க இடம் தேடி ஓட வேண்டி இருக்கும். அந்த மழை பெய்யும் வேளையில் நடக்கும் சம்பவங்கள் பற்றிய தொகுப்பு தான் இந்த கட்டுரை.

‘வெளியில மழை…what to do’ பாலச்சந்தர் அவர்களின் ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் இடம்பெற்ற அந்த கால புகழ்பெற்ற வசனம். நண்பர் எழுத்தாளர் ரிஷிவந்தியா பாஸ்கர் அவர்களோடு பேசிக்கொண்டு இருக்கும் போது அவர் இந்த டயலாக்கை பற்றி சொன்னார். உடனே இந்த தலைப்பில் கட்டுரை எழுத வேண்டும் என்று தோன்றியது.

அபூர்வ ராகங்கள் படத்தில் கமல், ஸ்ரீவித்யா இருவரும் வெளியே சென்று விட்டு மழையில் குடை பிடித்தபடி நடந்து வந்து காரில் ஏற வருவார்கள். காருக்குள் காதல் ஜோடி ஒன்று கட்டிப்பிடித்தபடி இருப்பார்கள். அப்போது கமல் அவர்களைப் பார்த்து ‘இது எங்க கார்’ என்று சொல்வார். உடனே அந்த ஆண் ‘வெளியிலே மழை what to do’ என்று சொல்வான். வீடு திரும்பிய பிறகும் கமல் அதை நினைத்து சிரிப்பார். ஏன் சிரிக்கிற என்று ஸ்ரீவித்யா கேட்க அதற்கு அவர் ‘வெளியில மழை’ what to do’ என்று சொல்லி மீண்டும் சிரிப்பார்…ஸ்ரீவித்யாவும் சிரிப்பார். அவர்களுக்குள் காதல் ஆரம்பமாகும் காட்சி அது..’மோகனம்’ என்று தலைப்பிடுவார் இயக்குநர். மழை பல விஷயங்களுக்கு காரணமாகிவிடுகிறது.

ஒரு மழைக்காலத்தில் நடக்கும் கதை தான் 60 களில் விகடனில் வெளிவந்த ஜெயகாந்தன் அவர்கள் எழுதிய ‘அக்கினிப்பிரவேஷம்’ என்ற சிறுகதை.

ஒரு மழை நாளில் கல்லூரியில் இருந்து வீடு திரும்ப பஸ் கிடைக்காத இளம்பெண்ணை பணக்கார இளைஞன் ஒருவன் ஏமாற்றி தனது காரில் ஏற்றிச் சென்று அவளை பலவந்தப்படுத்தி விடுகிறான். என்ன நடந்தது என்று புரியாத வயது. நடந்ததை தனது தாயாரிடம் சொல்கிறாள் அப்பெண். அவளை மன்னித்து ஏற்றுக் கொள்கிறார் அம்மா. பின்னர் இந்த சிறுகதை ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற பெயரில் தொடர்கதையாக வெளிவந்து திரைப்படமாகவும் உருவானது. அதன் தொடர்ச்சியாக ‘கங்கை எங்கே போகிறாள்’ என்று பாகம் 2 வும் வார இதழ் ஒன்றில் வெளிவந்தது.

பொதுவாக அன்றைய கால திரைப்படங்களில் மழையில் கதாநாயகன் நாயகி நனைந்தால் அவர்கள் தவறு செய்வது போல் தான் காட்டுவார்கள். விதிவிலக்காக வந்த படம் ‘காதல் கோட்டை’ . தனது காதலன் யாரென்றே தெரியாத/நேரில் சந்திக்காதவனை தேடி அலையும் போது நாயகனும்(அஜித் -ஆட்டோ டிரைவர்) நாயகியும்..(தேவயானி) மழையில் நனைந்து விடுவார்கள். அஜித் தேவயானியிடம் பொறுமையாக எடுத்துச் சொல்லி அவரது ரூமுக்கு அழைத்துச் சென்று இருவரும் மாற்று உடையணிந்து பிறகு மீண்டும் ஆட்டோவில் ரயில்வே ஸ்டேஷன் செல்வார்கள். அந்த மழை காட்சியில் இருந்து தான் பரபரப்பான/உணர்ச்சிகரமான அந்த கிளைமாக்ஸ் தொடங்கும்.

மூன்றாம் பிறை படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வெளியே மழை பெய்து கொண்டிருக்கும் போது மனநலம் பாதித்து குணமான ஸ்ரீதேவியை அவரது பெற்றோர்கள் தங்கள் ஊருக்கு ரயிலில் அழைத்து செல்வார்கள். பிளாட்பாரத்தில் மழையில் நனைந்தபடி ‘விஜி..விஜி..சீனு விஜி சீனு விஜி’ -என்று சொல்லியபடியே ஓடி வருவாரே கமல் மறக்க முடியுமா… திரையில் மட்டுமல்ல திரையரங்கத்திலும் கண்ணீர் மழையை வரவழைத்த காட்சி அது.

தமிழ் மாதங்கள் போல கேரளாவிலும் கொல்லவர்ஷம் என்ற மலையாள வருடப் பிறப்பு மற்றும் சூரிய நாட்காட்டி முறை உள்ளது. அதுவும் 12 மாதங்களை கொண்டது. அதன்படி கர்கிடக மாதம் (நமக்கு ஆடி போல ..ஜூலை 17 முதல் அகஸ்ட் 16 வரையில்) ஆன்மீக மாதமாக கொண்டாடப்படுகிறது. பலத்த மழை பெய்யும் காலம்.

கர்கிடகம் கடக ராசியை குறிக்கும். கனமழை காரணமாக விவசாய வேலைகள் பாதிக்கப்படும். இந்த காலம் மக்களின் நேர்மறை ஆற்றலை வளர்க்கும் ஆன்மீக மாதமாக பார்க்கப்படுகிறது. வீடுகளிலும் கோயில்களிலும் ‘துஞ்சத்து எழுத்தச்சன்’ அவர்களின் கிளிப்பாட்டு ராமாயணம் வாசிக்கப்படும். பருவமழை காலமாக இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மூலிகைகளை சேர்த்து தயரிக்கப்படும் மருந்து கஞ்சியை மக்கள் குடிக்கிறார்கள்.

வெளியே மழை பெய்யும் போது நாம் அந்த நேரம் எங்கு இருக்கிறோமோ அதைப் பொறுத்துதான் நமது திட்டமிடல் அமையும். குடை வாங்கலாமா…ரெயின் கோட் வாங்கலாமா…பேருந்து பயணமா…ரயில் பயணமா…ஆட்டோவா..?- இந்த சிந்தனை ஓடிக்கொண்டு இருக்கும். இது ஒரு குறுகிய காலம் தான். யோசித்து முடிவு எடுத்து செயல்படுத்துவதற்குள் மழைக்காலம் முடிந்து விடும்.

அந்த குறுகிய காலங்களில் நடக்கும் சிறு சிறு சம்பவங்கள் நம் மனதுக்குள் ஒரு மூலையில் தங்கி விடும். சமீபத்தில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் சித்திர நாட்டியம் என்ற பிரம்மாண்ட நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியில் ‘மயூர நடனம், மற்றும் மயூர நர்த்தனம்’ என்ற கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. நூற்றுக்கணக்கான பரத கலைஞர்கள் தங்கள் உடல் அசைவால் தத்ரூபமாக மயில் உருவத்தை உருவாக்கினர். அப்போது எதிர்பாராத விதமாக மழை பெய்யத் தொடங்கியது. கொட்டும் மழையிலும் கால்கள் தாளம் தவறாமல் ஆட்டத்தை தொடர்ந்தார்கள். நாட்டியத்தின் மீதான அந்த கலைஞர்களின் அர்ப்பணிப்பு மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது.

டெல்டா பகுதி

வெளியே மழை பெய்யும் போதும்..பெய்வதற்கு முன்பும் நடக்கும் சம்பவங்களை பட்டினப்பாலையில் உருத்திரங்கண்ணனார் பாடியுள்ளார்.

“வான் முகந்த நீர் மலைப் பொழியவும்

மலைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும்

மாரி பெய்யும் பருவம் போல்

நீரினின்றும் நிலத்து ஏற்றவும்

நிலத்தினின்று நீர்ப் பரப்பவும்..”

-மேகம் கடலில் முகந்த நீரை மலையிலே மழையாக பொழிவதும், மலையில் பொழிந்த மழை ஆறாக உருவாகி நிலத்தில் பாய்ந்து கடலில் சென்று கலக்கிறது. நீர் சுழற்சி பற்றி இந்த பாடலில் விளக்கியுள்ளார். இதுதான் நீர் மேலாண்மை.

வெளியில மழை பெய்யும் போது நாம் என்ன செய்யலாம்… வீடு கட்டும் போதே மழை நீர் சேமிப்பு தொட்டி அமைத்து முறையாக பராமரிக்க வேண்டும். நிலத்தடி நீர் குறையாமல் இருக்கும். இதை கட்டாய நடைமுறை ஆக்குவது நல்லது.

மழைக்காலங்களில் டெல்டா மாவட்டங்களில் பல ஆறுகள் சாலைகளில் வழிந்தோடும் அளவுக்கு இருக்கும். அவை அனைத்தும் கடலில் சென்று கலந்து விடுகின்றன. தடுப்பணை கட்டி சேமிக்க வேண்டும் என்று சமீபத்தில் சட்டசபையில் சௌமியா அன்புமணி அவர்கள் பேசினார்கள். அப்படி செய்தால் தண்ணீருக்காக இன்னொரு மாநிலத்திடம் கையேந்தும் நிலைமை வெகுவாக குறையும்.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *