மேலும், விசாரணையில், பல்வேறு வழக்குகளை குமரவேல் தலைமையிலான தனிப்படை முறையாக விசாரிக்காமல், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து, எஸ்.பி சுந்தரவதனம், எஸ்.ஐ., குமரவேல், ஏட்டு தர்மலிங்கம், போலீஸார் ஜெகன், சின்னத்துரை ஆகிய நான்கு பேரையும் தஞ்சாவூர் ஆயுதப்படை பிரிவுக்கு பணியிட மாற்றி நடவடிக்கை மேற்கொண்டார். இந்த சம்பவம் தஞ்சாவூர் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து விபரம் அறிந்த சிலரிடம் பேசினோம், “ஒரத்தநாடு அருகே உள்ள மேலஉளூரில் உள்ள ஒரு வீட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்டது. மொத்தம் 20 பவுன் கொள்ளை போனதாக சொல்கிறார்கள். இதனை குரமவேல் தலைமையிலான தனிப்படை விசாரித்த நிலையில் நகையை திருடிய நபரை கைது செய்ததுடன் அவரிடமிருந்து 20 பவுன் நகையை பறிமுதல் செய்ததாக சொல்கிறார்கள். இந்த வழக்கின் எஃப்.ஐ.ஆரில் 4 பவுன் மட்டுமே காணாமல் போனதாக பதியப்பட்டுள்ளது என்கிறார்கள்.