Reporter Special: பாஜக உறவு..? தாஜா செய்யும் சீனியர்ஸ்.. கன்ஃபூஷனில் திமுக தலைமை! – Kumudam

Spread the love

தி.மு.க.விடமிருந்து பெரும் பான்மையான கூட்டணிக் கட்சிகள் கழன்றுகொண்ட நிலையில், இதுவரை கொள்கை எதிரியாகக் கருதி போரிட்டு வந்த பா.ஜ.க.வுடன் கைகோக்கவும் பரிசீலனை செய்துவருகிறதாம் அக்கட்சி. அரசியலில் எதுவும் நடக்கலாம் என்கிற தத்துவத்துக்கேற்ப தி.மு.க. –பா.ஜ.க. பா.ம.க. -அ.ம.மு.க என மெகா கூட்டணியை அமைக்க தி.மு.க. தலைமை யோசிப்பதுதான் தமிழக அரசியலில் டெல்லியை நோக்கி வேகமெடுக்கும் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்!

தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுகவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சீனியர்கள் தலைமையிடம் பல்வேறு கருத்துகளை வலியுறுத்திவருகின்றனர். அவ்வகையில் ஒரு தரப்பு தொண்டர்களை உற்சாகப்படுத்தவும், த.வெ.க கூட்டணியை எதிர்கொள்ளவும் உடனடியாக வலிமையான கூட்டணியை நாம் அமைப்பது அவசியம் என திமுக தலைமை அழுத்தி சொல்லியிருக்கிறது. மேலும், ஒரே நேரத்தில் மத்திய அரசையும், மாநில அரசையும் பகைத்துக்கொண்டு அரசியல் செய்வதற்கு பதிலாக, பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பதில் தவறில்லை என்றும் தலைமை நினைக்கிறதாம்.

குறிப்பாக கே.என்.நேரு. செந்தில்பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் உள்ளிட்ட பலர்மீது ஈடி. ஐடி, சி.பி.ஐ., விஜிலென்ஸ் ஆகியவை பதிவு செய்த பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த சூழலில் மத்திய அரசுடனாவது இணக்கமாக செல்லலாம் என தி.மு.க சீனியர் நிர்வாகிகள் நினைக்கிறார்கள். மேலும், ‘காங்கிரஸ், வி.சி.க. இடதுசாரிகள். ஐ.யூ.எம்.எல். ஆகிய கட்சிகளெல்லாம் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருந்தது பா.ஜ.க எதிர்ப்புஎன்ற ஒற்றை புள்ளியில்தான். அவர்களெல்லாம் இப்போது த.வெ.க.வுக்கு ஆதரவாக மாறியபிறகு அந்த நிலைப்பாடு மட்டும் நமக்கு எதற்கு? இதனால், இந்துக்களின் வாக்கு வங்கியை பறிகொடுத்ததுதான் மிச்சம்என்பது அவர்களின் வாதமாக இருக்கிறதாம். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என்பதால் இதுகுறித்து தி.மு.க தலைமை தீவிரமாக யோசித்துவருகிறது.

முன்னதாக, முன்னாள் முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தோடு மைசூரில் ஓய்வெடுக்கச் சென்றிருந்தபோது, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தரப்பிலிருந்து ஒருவர் பாஜக தூதுவராக வந்து பேசினார் என்கிறார்கள். அப்போது, ‘உங்களிடம் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் 30 எம்.பி.க்கள் இருக்கிறார்கள் தவிர. உங்கள் பேச்சைக் கேட்கும் நட்புக் கட்சிகளும் இருக்கின்றன. வரும் மக்களவை கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல். மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை ஆகிய மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றுவதற்கு உங்கள் உதவி தேவை. மேலும் மோடியும். அமித் ஷாவும் தென்னிந்தியாவிலேயே வலிமையானக் கட்சியான திமுகவுடன் கைகுலுக்க விரும்புகிறார்கள்என அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கு திமு.க தரப்பிலிருந்து, ‘நாங்கள் வலுவாக எதிர்த்ததால்தான் கடந்தமுறை அந்த மசோதாக்கள் தோல்வியை தழுவின. நாங்களே இப்போது எப்படி ஆதரிக்க முடியும்? எனக் கேட்க பாஜக தூதுவரோ, ‘நேரடியாக ஆதரிக்கத் தேவையில்லை மசோதா மீதான வாக்கெடுப்பை உங்கள் எம்.பி.க்கள் புறக்கணித்தால்கூட போதும் அவையில் உள்ள மற்ற எம்.பிக்களில் மூன்றில் இரு பங்கை வைத்து பெரும்பான்மையை நிரூபித்துவிடுவோம் இதை நீங்கள் செய்துகொடுத்தால், உங்கள் தரப்பு மீதான வழக்குகளின் தீவிரத்தன்மை குறையும். விருப்பப்பட்டால் நீங்கள் அமைச்சரவையிலும் பங்கு பெறலாம் என்று கூறியதாக தெரிகிறது.

இதை முன்வைத்து, திமுக மேலிடம் இன்னொரு கணக்கும் போடுகிறது. அதாவது. திமு.க தலைமையில் வலுவான ஒரு கூட்டணி அமைய பா.ஜ.க. மட்டும் போதாது. கூட்டணியிலிருந்து வெளியேறிய கட்சிகளின் இழப்பை ஈடுசெய்யும் வகையில் பா.ம.க, நா.த.க. அ.ம.மு.க. கட்சிகளையும் இணைத்துக்கொள்ளலாம் எனவும் ஆலோசிக்கிறது‘ என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

எது எப்படியோ, திமுகவின் அரசியல் எதிர்காலம் அது எடுக்கும்போகும் முடிவில் தான் இருக்கிறது.

 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *