ஷாக் கொடுத்த சர்வே… ஆட்டம் கண்ட விஜய்யின் Confidence? மாறிய தவெக கணக்கு! – Kumudam

Spread the love

இடைத்தேர்தல் களத்தில் ஆரம்பத்தில் இருந்த கணக்கையே மாற்றி, விஜயை நேரடியாக பிரசாரத்தில் இறக்குகிறார். மதுராந்தகம், தாராபுரம் என இரு தொகுதிகளிலும் தலா இரண்டு நாட்கள் விஜய் பிரசாரம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதுதான் இப்போது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.

ஆரம்பத்தில் இந்த இடைத்தேர்தலை மிகவும் எளிதாகக் கையாளலாம் என்ற கணக்கில்தான் தவெக தலைமை இருந்ததாக கூறப்படுகிறது. ஐந்துமுனைப் போட்டி என்பதால் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பல பிரிவுகளாகச் சிதறும். அதனால் தவெக வேட்பாளர்கள் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற முடியும் என்றும், விஜய் நேரடியாக களத்துக்கு வர வேண்டிய அவசியமே இருக்காது என்றும் கட்சி வட்டாரத்தில் கணிக்கப்பட்டதாக தெரிகிறது.

அதன் அடிப்படையில்தான், மதுராந்தகத்துக்கு ஆதவ் அர்ஜுனாவையும், தாராபுரத்துக்கு அருண்ராஜையும் தேர்தல் பொறுப்பாளர்களாக தவெக தலைமை நியமித்ததாக கூறப்படுகிறது. அதேபோல், ஆனந்த், கே.ஏ.செங்கோட்டையன், சி.டி.ஆர்.நிர்மல்குமார் உள்ளிட்டோர் தேர்தல் பணிகளை கண்காணிக்கும் பொறுப்பில் வைக்கப்பட்டனர். ஆனால், கள நிலவரம் எதிர்பார்த்தபடி இல்லை என்கிற தகவல்கள் தவெக தலைமைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

கட்சியின் உள்கட்டமைப்பு மற்றும் வேட்பாளர் தேர்வு குறித்து நிலவும் அதிருப்தி, ஆட்சியின் செயல்பாடுகள் தொடர்பான உள்ளூர் பிரச்னைகள், மின் கட்டணம், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்டவை மக்களிடையே பேசப்படுவதாக அந்தக் கட்சிக்குள் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் கள ஆய்வில் தெரியவந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ஏற்கனவே பதவி விலகியவர்களுக்கே மீண்டும் தேர்தல் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறித்தும் சில இடங்களில் அதிருப்தி இருப்பதாக கூறப்படுகிறது. தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பான எதிர்பார்ப்புகளும் களத்தில் விவாதமாக இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதோடு, சமூக வலைதளங்களில் விஜய்க்கு இருக்கும் மாஸ் வேறு… தேர்தல் களத்தில் அதன் தாக்கம் வேறு என்ற விஷயமும் தவெக தலைமைக்கு புரிந்திருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக, இளைஞர்களை மையப்படுத்திய ரீல்ஸ் மற்றும் டிஜிட்டல் பிரசாரம் மட்டும் போதாது. நடுத்தர வயதினர் மற்றும் கிராமப்புற வாக்காளர்களை நேரடியாக சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக கட்சிக்குள் பேசப்படுவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, இந்த இரு தொகுதிகளிலும் திமுகவின் களப்பணி வேகம் பெற்றிருப்பதாகவும், அதிமுக தரப்பில் இருந்து தவெகவுக்கு எதிரான மறைமுக அரசியல் நகர்வுகள் இருக்கலாம் என்றும் பல்வேறு அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அதேபோல், கூட்டணி கட்சிகளின் தேர்தல் களப்பணி குறித்தும் தவெக தரப்பில் சந்தேகங்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

இவற்றுக்கு மத்தியில், விஜய்க்கு சில அரசியல் மைலேஜ்களும் இருப்பதாக தவெக தரப்பு கணக்குப் போடுகிறது. குறிப்பாக, பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிட்டது, சிங்கப்பெண் அதிரடிப்படை போன்ற நடவடிக்கைகள், பாமக தேர்தல் களத்தில் நேரடியாக களம் இறங்காத சூழல், அதிமுகவின் உள்கட்சி பிரச்னைகள் போன்றவை தங்களுக்கு சாதகமாக அமையலாம் என தவெக கணக்கிடுவதாக கூறப்படுகிறது.

ஆனால், இவை மட்டும் போதாது… இடைத்தேர்தல் முடிவு விஜயின் அரசியல் பிம்பத்தோடு நேரடியாக இணைக்கப்படும் என்ற அச்சம் தவெக தலைமைக்குள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, வெற்றி பெற்றாலும் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது அல்லது தோல்வியை சந்திப்பது ஆகிய இரு சூழல்களுமே விஜயின் அரசியல் பலம் குறித்து கேள்விகளை எழுப்பக்கூடும் என்ற கணக்கு போடப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால்தான், பொதுத்தேர்தலின்போதுகூட குறுகிய காலமே நேரடியாக பிரசாரம் செய்த விஜய், இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு வரமாட்டார் என்ற ஆரம்ப முடிவிலிருந்து தற்போது பின்வாங்கியிருப்பதாக தெரிகிறது.

தற்போதைய திட்டப்படி, மதுராந்தகம் தொகுதியில் செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 2 ஆகிய தேதிகளிலும், தாராபுரம் தொகுதியில் செப்டம்பர் 27 மற்றும் அக்டோபர் 3 ஆகிய தேதிகளிலும் விஜய் பொதுக்கூட்டம் மற்றும் பிரசார வாகனம் மூலம் வாக்கு சேகரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, இரு தொகுதிகளின் தவெக வேட்பாளர்களும் பிரசாரத்தில் விஜயின் பெயரை முன்னிறுத்தி வாக்கு சேகரிப்பதாக கூறப்படுகிறது. “விஜய் நேரடியாக இங்கு போட்டியிடுவதாக நினைத்தே வாக்களியுங்கள்” என்ற பாணியில் அவர்கள் வாக்காளர்களிடம் பேசத் தொடங்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது, ஆரம்பத்தில் “விஜய் இல்லாமலேயே முடித்துவிடலாம்” என்ற இடைத்தேர்தல் கணக்கு… இப்போது “விஜய் வந்தால்தான் களம் மாறும்” என்ற நிலைக்கு வந்திருக்கிறதா என்பதுதான் அரசியல் வட்டாரங்களில் எழும் முக்கிய கேள்வி.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *