ஹார்முஸ் ஜலசந்தியில் போர் மேகம்! 10% எகிறிய கச்சா எண்ணெய்.. பெட்ரோல், கேஸ் சிலிண்டர் விலை உயர்கிறதா? | Hormuz Strait Faces New War Tension! Oil Prices Rise 10%.. Will Petrol and LPG Prices Go Up?

Spread the love

International

oi-Hema Vandhana

துபாய்: ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் வெடித்துள்ள போர் பதற்றம் உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தை முடக்கியுள்ளது… இதனால் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை ஒரே நாளில் 10 சதவீதம் உயர்ந்துள்ளது.. இது பொதுமக்களின் பட்ஜெட்டில் பெரிய ஷாக்கை தந்துள்ளது.. மறுபடியும் உயரப் போகும் பெட்ரோல், டீசல் விலையால் இந்திய மக்கள் கவலையிலும், கலக்கத்திலும் உள்ளனர்.

உலக நாடுகளுக்கெல்லாம் எண்ணெய் சப்ளை செய்யும் முக்கிய ரூட் ஹார்முஸ் ஜலசந்தி… அந்தப் பாதையைத்தான் இப்போது ஈரான் அரசு லாக் செய்துவிட்டது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 10 சதவீதம் உயர்ந்துவிட்டது. இந்த செய்தியை கேட்டு வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, சாமானிய மக்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

Hormuz Strait Faces

கச்சா எண்ணெய் விலை

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே தொடங்கிய மோதல் இப்போது ஹார்முஸ் ஜலசந்தியைப் போர்க்களமாக மாற்றியுள்ளது. வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், அமெரிக்கா விடாமல் பதில் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது. இதனால் சவுதி, குவைத் போன்ற நாடுகளில் இருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றி வரும் கப்பல்கள் நடுவழியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன..

எண்ணெய் வரும் வழி அடைக்கப்பட்டால் என்னவாகும்? சந்தையில் எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்படும்.. அத்துடன் விலையும் தாறுமாறாக எகிறிவிடும்.

கடந்த முறை ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டபோது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 110 டாலர் வரை உயர்ந்தது. இதனால் பல நாடுகளில் எரிபொருள் விலை உயர்ந்ததுடன், விலைவாசியும் அதிகரித்தது. பிறகு கடந்த மாதம் ஈரான்-அமெரிக்கா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 68 டாலராகக் குறைந்தது.

கேஸ் சிலிண்டர் விலை

இதன் விளைவாக, இந்த மாத தொடக்கத்தில் வர்த்தக சிலிண்டர் விலை 172 ரூபாய் குறைக்கப்பட்டதுடன், விநியோகக் கட்டுப்பாடுகளையும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நீக்கின. எனினும் கடந்த 3 மாதங்களில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டியிருந்ததால், பெட்ரோல் மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இப்போது மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளதால், எரிபொருள் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பும் மங்கியுள்ளது.

இன்று காலை நிலவரப்படி, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 77 டாலரில் இருந்து 85 டாலராக உயர்ந்துவிட்டது. இந்த விலை உயர்வு அப்படியே இந்தியாவிற்கு வந்து சேரும்போது, பெட்ரோல், டீசல் விலை இன்னும் உயர்ந்துவிடும். ஏற்கனவே சென்னையில் பெட்ரோல் விலை 107 ரூபாயை தாண்டி எகிறி கொண்டிருக்கும்போது, இந்த விலையேற்றம் மக்களுக்கு சுமையாகவே இருக்கக்கூடும்.

மளிகைப் பொருட்கள், லாரி வாடகை

பெட்ரோல், டீசல் மட்டுமல்ல, சமையல் கேஸ் சிலிண்டர் விலையும் கூட உயரும் அபாயம் ஏற்படும் என்கிறார்கள்.. சில நாட்களுக்கு முன்புதான் வர்த்தக சிலிண்டர் விலை குறைக்கப்பட்டது. ஆனால், இப்போது ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் போர்ச்சூழல், விலையை இனி குறைக்காது என்றே தெரிகிறது.. எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட, வரும் நாட்களில் பெட்ரோல் மற்றும் சிலிண்டர் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு அவை தள்ளப்படலாம்.

எண்ணெய் விலை உயர்ந்தால் அது வெறும் பெட்ரோல் பங்க் விலையுடன் நின்றுவிடுவதில்லை. காய்கறிகள் முதல் அத்தியாவசியப் பொருட்கள் வரை கொண்டு வரும் லாரிகளின் வாடகை உயரும். லாரி வாடகை உயர்ந்தால், மளிகைக்கடைப் பொருட்களின் விலையும் தானாகவே உயரும். மொத்தத்தில், சர்வதேச அளவில் நடக்கும் இந்த மோதலின் தாக்கம் மக்களின் அன்றாட செலவுகளிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.

ஒரு பீப்பாய் 100 டாலரை தாண்டுமா

அப்படியானால் இனி என்ன நடக்கும்? அமெரிக்கா தனது ராணுவத்தை இன்னும் தீவிரப்படுத்தினால், அல்லது ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியைத் தொடர்ந்து மூடி வைத்தால், கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 100 டாலரைத் தாண்டும் என்கிறார்கள் வல்லுநர்கள். அரசு உடனடியாக இறக்குமதி வரிகளைக் குறைத்து, பெட்ரோல் விலையைக் கட்டுக்குள் வைக்குமா அல்லது அந்தச் சுமையை மக்கள் தலையிலேயே சுமத்துமா? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *