Cricket
oi-Yogeshwaran Moorthi
சென்னை: 2027 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற வாய்ப்புள்ள வீரர்களை கிரிக்கெட் ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்துள்ளார். அதில் 13 வீரர்களுக்கு கட்டாயம் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறியுள்ள அஸ்வின், சஞ்சு சாம்சன், சிவம் துபே போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என்று நேரடியாகவே கூறி இருக்கிறார்.
2027 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே இருக்கிறது. 24 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஆப்பிரிக்காவில் உலகக்கோப்பை நடக்க உள்ளதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனையொட்டி உலகக்கோப்பை தொடருக்கான லோகோ மற்றும் மைதானங்களின் விவரங்களை ஐசிசி வெளியிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவுக்கு கடைசி உலகக்கோப்பை தொடராக அமைந்திருக்கிறது. இதற்காக இருவருமே தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க வீரர்களை தேர்வு செய்துள்ளார்.
இந்திய ஒருநாள் அணிக்காக ஆடியுள்ள, ஆட வாய்ப்புள்ள வீரர்களை வைத்து அவரின் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அஸ்வின் 13 வீரர்கள் கண்டிப்பாக இந்திய அணியில் இடம்பிடிப்பார்கள் என்றும், 9 வீரர்களுக்கு வாய்ப்புகள் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல் 8 வீரர்கள் இடம்பிடிக்க வாய்ப்புள்ளோர் பட்டியலில் இருக்கின்றனர்.
அதன்படி சுப்மன் கில், விராட் கோலி, ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், இஷான் கிஷன், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா, ஹர்சித் ராணா, முகமது சிராஜ், பும்ரா மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோரின் பெயர்கள் நிச்சயமாக இடம்பெறும் என்று அஸ்வின் கூறியுள்ளார். அதேபோல் சஞ்சு சாம்சன், சிவம் துபே, அபிஷேக் சர்மா ஆகியோர் இடம்பிடிக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார்.
இதில் சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்கள். ஹர்திக் பாண்டியா இல்லையென்றால் மட்டுமே சிவம் துபே இடம்பெற முடியும். அதேபோல் வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னாய், பிரின்ஸ் யாதவ், குர்னூர் ப்ரார், ரிஷப் பண்ட் ஆகியோரும் இடம்பிடிக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார். தென்னாப்பிரிக்காவில் ஸ்பின்னர்களுக்கு பெரியளவில் வேலை இருக்காது. இதனால் ஒரு ஸ்பின்னர் போதும்.
இதனால் வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னாய் அவசியம் இருக்காது. அதேபோல் ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், வருண் சக்கரவர்த்தி, ஜடேஜா, நிதீஷ் குமார் ரெட்டி, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பிடிக்க வாய்ப்புகள் உள்ளது என்று கூறியுள்ளார். சிராஜ் அல்லது பும்ரா ஆகியோரில் யாருக்காவது காயம் ஏற்பட்டால், ஷமி உள்ளே வரக்கூடும் என்று பார்க்கப்படுகிறது.

