16 மாதமாச்சே.. மோடியை பார்த்ததும் டொனால்ட் டிரம்ப் கொடுத்த ரியாக்சன்! ஜி7 மாநாட்டில் சுவாரசியம் | PM Modi – Donald Trump shake hands and interaction at G7 Summit in France

Spread the love

International

-Nantha Kumar R

பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் ஜி7 நாடுகளின் உச்சி மாநாடு தொடங்கி நடந்து வருகிறது. இந்த மாநாட்டில், பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்பட ஜி7 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். கடந்த 16 மாதங்களுக்கு பிறகு பிரதமர் மோடி – டொனால்ட் டிரம்ப் ஆகியோர் சந்தித்து கொண்டனர். அப்போது பிரதமர் மோடியை பார்த்ததும் டொனால்ட் டிரம்ப் கொடுத்த ரியாக்சன் தொடர்பான வீடியோ இணையதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

PM Modi and President Trump shaking hands at G7

உலக நாடுகள் ஒவ்வொன்றும் பல்வேறு கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன. அதன்படி ஜி7 அமைப்பில் பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி, கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்டவை அங்கம் வகிக்கின்றன. இந்த அமைப்பில் நம் நாடு உறுப்பினராக இல்லை.

இருப்பினும் கூட ஒவ்வொரு ஆண்டும் ஜி7 மாநாட்டிற்கு தலைமையேற்கும் நாடுகள் தங்களின் நட்பு நாடுகளை சிறப்பு அழைப்பாளராக அழைப்பது வழக்கம். அந்த வகையில் இந்த முறை ஜி7 உச்சி மாநாட்டை பிரான்ஸ் தலைமை தாங்கி நடத்தி வருகிறது. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் மற்றும் பிரதமர் மோடி இடையே நெருங்கிய நட்பு உள்ளது.

இதனால்பிரதமர் மோடி ஜி7 மாநாட்டில் பங்கேற்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி இந்த கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். பிரான்ஸின் ஏவியன்-லெ-பெய்ன்ஸ் நகரில் ஜி7 நாடுகளின் உச்சி மாநாடு தொடங்கி நடந்து வருகிறது.

அமெரிக்கா உறுப்பு நாடாக இருக்கிறது. இதனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த மாநாட்டில் பங்கேற்றார். இந்த மாநாட்டின் தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் சந்தித்து கொண்டனர். அப்போது இரு தலைவர்களும் அன்போடு கைகுலுக்கி, தோளில் தட்டி கொடுத்து உரையாடினர். உச்சி மாநாடு அரங்கிற்கு ஒவ்வொரு தலைவர்களும் வந்தனர். டொனால்ட் டிரம்ப் முதல் ஆளாக வந்து தனது இருக்கையில் அமர்ந்து இருந்தார்.

அதன்பிறகு பிரதமர் மோடி வந்தார். டிரம்ப் அருகே பிரதமர் மோடிக்கு இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது. மோடி தனது இருக்கையை நோக்கி சென்றார். அப்போது அவரை பார்த்த டிரம்ப் உடனடியாக எழுந்து நின்று கைக்குலுக்கினார். அதன்பிறகு சில வினாடிகள் இருவரும் புன்னகைத்தபடி பேசி தோளில் தட்டிக்கொடுத்தனர். இது இரு தலைவர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக இருக்கும் நல்ல நட்பை பறைசாற்றும் வகையில் இருந்தது.

அதன்பிறகு பிரதமர் மோடியின் அருகே அமர்ந்திருந்த டொனால்ட் டிரம்ப் தனது இரு கைகளின் கட்டை விரல்களையும் உயர்த்தி (double thumbs-up) ‘தம்ப்ஸ் அப்’ சைகை காட்டினார். இது மாநாட்டுக்கு வந்திருந்த பிற நாடுகளின் தலைவர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின் வரிகள் தொடர்பான பல மாத கால பிணக்குகளுக்கு பிறகு இருவரும் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பிரதமர் மோடி வெள்ளை நிற குர்தா -பைஜாமா மற்றும் நீல நிற ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்திருந்தார். டிரம்ப் நீல நிற சூட் மற்றும் சிவப்பு நிற டை அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு ஜனவரி 20ம் தேதி பொறுப்பேற்றார். அதன்பிறகு அடுத்த சில நாட்களில் பிரதமர் மோடி வெள்ளை மாளிகையில் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்தார். அதன்பிறகு இருவரும் சந்தித்து பேசவில்லை. 16 மாத இடைவெளிக்கு பிறகு மோடி – டிரம்ப் ஆகியோர் இன்று சந்தித்து பேசி கொண்டனர்.

இதற்கிடையே தான் பாகிஸ்தானுக்கு எதிரான ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை நிறுத்தியது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு வரிகளை விதித்தது உள்ளிட்டவற்றால் இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவு பாதிக்கப்பட்டது. அதன்பிறகு டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கான வரிகளை குறைத்தார். தற்போது இருநாடுகள் இடையேயான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த சந்திப்பு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *