கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரையடுத்து, நாடு தழுவிய அளவில் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், வரும் ஜூன் 21 ஆம் தேதி நடைபெறவுள்ள மறுதேர்வில் எந்தவிதமான முறைகேடுகளையும் தடுக்கும் நோக்கில், தேசிய தேர்வு முகமை (NTA) முன்னெப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தால் பாதிக்கப்பட்ட 22 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களின் நம்பிக்கையை மீண்டும் பெறும் வகையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கிறார்கள் அதிகாரிகள்.]
சில ஆங்கில ஊடகங்களுக்கு கிடைத்த தகவலின்படி, வினாத்தாள் தயாரிக்கும் பணி முழுமையான பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. சுமார் 20 நாட்களுக்கு முன்பு, ஆசிரியர்கள் மற்றும் பாட வல்லுநர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டு, அவர்கள் அன்று முதல் அவர்கள் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொலைபேசி அல்லது இணையதள வசதி முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளதுடன், வெளி உலகத்துடனான தொடர்பும் மிகக் குறைந்த அளவிலேயே அனுமதிக்கப்படுகிறது. ஜூன் 21 ஆம் தேதி தேர்வு முடியும் வரை இந்த கடுமையான கட்டுப்பாடுகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மறுதேர்வை எவ்விதக் கசிவும் இன்றி நடத்துவதை உறுதி செய்ய, விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வினாத்தாள்களை தேர்வு மையங்களுக்குக் கொண்டு செல்லும் முக்கியப் பணியில் இந்திய விமானப்படை (IAF) ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, நாடு முழுவதும் தேர்வு தொடர்பான பணிகளுக்காக சுமார் ஐந்து லட்சம் பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான கண்காணிப்புக் கேமராக்கள் மற்றும் சமூக ஊடகங்களைக் கண்காணித்து முறைகேடு முயற்சிகளைத் தடுக்கும் நவீன தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்பட உள்ளன.
நீட் போன்ற பெரிய அளவிலான தேர்வுகளுக்கு ஏற்கனவே விரிவான வினாத்தாள் தயாரிப்பு நெறிமுறைகள் உள்ளன. பலகட்டங்களாக, வெவ்வேறு குழுக்கள் மூலம் பலவிதமான வினாத்தாள்கள் தயாரிக்கப்படும். இறுதியில் எந்த வினாத்தாள் தேர்வுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் என்பது யாருக்கும் தெரியாத வகையில் இந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த பாதுகாப்பு நெறிமுறைகளை மீறி சமீபத்திய வினாத்தாள் கசிவு நிகழ்ந்துள்ளது. சிபிஐ விசாரணையில், பல ஆண்டுகளாக என்.டி.ஏ-வில் பாட நிபுணராகப் பணியாற்றியதாகக் கூறப்படும் பி.வி. குல்கர்னி என்பவரின் பெயர் இவ்வழக்கில் வெளிவந்தது. அவர் நீட் வினாத்தாள்களின் பல வடிவங்களை அணுகியதாக விசாரணையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த வினாத்தாள் கசிவு தொடர்பாக குல்கர்னியை சிபிஐ கைது செய்துள்ளது.
கல்வி அமைச்சகம் மற்றும் தேசிய தேர்வு முகமைக்கு இடையே நடந்த பலசுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஜூன் 21 ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. வினாத்தாள் கசிவு தொடர்பான முழு விசாரணையும் மத்திய புலனாய்வுத் துறையிடம் (CBI) ஒப்படைக்கப்பட்டுள்ளது.