Business
oi-Vigneshkumar
சென்னை: உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான அசெஞ்சர் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கும் முறையை மொத்தமாக மாற்றியுள்ளது. அதன்படி அங்கீகரிக்கப்படும் சம்பள உயர்வில் வெறும் 50% மட்டுமே ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படுமாம். மீதமுள்ள 50%ஐ வேறு விதமாக தர அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.
கடந்த சில காலமாகவே ஐடி நிறுவனங்கள் மிக மோசமான நிலையில் உள்ளன. அதிலும் குறிப்பாக ஏஐ வந்த பிறகு சமீபத்திய மாதங்களில் பாரம்பரிய ஐடி சர்வீஸ் நிறுவனங்களில் பங்குகள் பயங்கர அடி வாங்கி வருகிறது. இதனால் பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையிலும் இறங்கியுள்ளன.

அசெஞ்சர்
இந்தச் சூழலில் தான் அசெஞ்சர் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கும் முறையை மொத்தமாக மாற்றியுள்ளது. அதன்படி அங்கீகரிக்கப்படும் சம்பள உயர்வில் 50 சதவீதம் மட்டுமே அடிப்படை சம்பளத்தில், அதாவது Base Salaryல் சேர்க்கப்படும். மீதமுள்ள 50 சதவீதம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் ஒரே தவணை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை இந்தியா உட்பட உலகெங்கும் பணியாற்றும் அசெஞ்சர் ஊழியர்களுக்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது..
இந்தியாவில் மட்டும் சுமார் 3.5 லட்சம் ஊழியர்கள் அசெஞ்சர் நிறுவனத்தில் வேலை செய்யும் நிலையில், அவர்கள் அனைவருக்குமே இந்த புதிய முறையே பின்பற்றப்படும். அதாவது சம்பள உயர்வு பெறும் அனைத்து ஊழியர்களுக்கும் இப்படி 50- 50% முறையிலேயே ஊதிய உயர்வு வழங்கப்படுமாம்.
புதிய முறை
உதாரணத்திற்கு ஒரு ஊழியருக்கு 5 சதவீத சம்பள உயர்வு அங்கீகரிக்கப்பட்டால்.. அதில் 2.5 சதவீதம் மட்டுமே அவரது அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படும். மீதமுள்ள 2.5 சதவீதம் ஜூன் மாதத்தில் ஒரே தவணையாக பணமாக வழங்கப்படும். இதன் மூலம் ஊழியர்களுக்கு உடனடி ரொக்கம் கையில் கிடைக்கும் என்றும் அதே நேரத்தில் அதிகமான ஊழியர்களுக்கு சம்பள உயர்வை வழங்கவும் முடியும் என அசெஞ்சர் விளக்கியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே ஐடி துறையில் நிச்சயமற்ற சூழல் இருந்த நிலையில், குறைவானவர்களுக்கே பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. கடந்தாண்டு அசெஞ்சர் நிறுவனத்தில் குறைந்த எண்ணிக்கையிலேயே ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்ட நிலையில், இந்தாண்டு இதுபோல சம்பள உயர்வை இரண்டு பகுதிகளாகப் பிரிப்பதன் மூலம், அதிகமான ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவி உயர்வு
அதேநேரம் பதவி உயர்வு பெறும் ஊழியர்களுக்கான சம்பள உயர்வில் எந்த மாற்றமும் இல்லை. பதவி உயர்வின்போது கிடைக்கும் சம்பள உயர்வு 100 சதவீதமும் அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படுமாம்.
மறுபுறம் அசெஞ்சர் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் தனியாக ஆண்டு போனஸ் வழங்கும். அது வழக்கம் போல தொடரும் என்றும் அதற்கும் இந்த ஜூன் மாத சம்பள உயர்வு ரொக்க தொகைக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை அசெஞ்சர் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், சம்பள உயர்வு என்பது ஊழியர்களின் திறன், பெர்பாமன்ஸ், அவர்கள் நிறுவனத்திற்கு அளிக்கும் பங்களிப்பு என பல்வேறு அம்சங்களின் அடிப்படையிலேயே தொடரும் என்றும் அசெஞ்சர் தெரிவித்துள்ளது.
குழப்பம்
இந்த புதிய சம்பள உயர்வு முறைக்கு ஊழியர்கள் மத்தியில் கலவையான வரவேற்பு கிடைத்துள்ளது. சிலரு் இந்த நடைமுறை இந்த ஆண்டு மட்டும் அமல்படுத்தப்படுமா அல்லது நிரந்தரமாக தொடருமா என்பதில் தெளிவு இல்லை என்கிறார்கள். சிலர் ஜூன் மாதத்தில் ஒரே தவணையாக வழங்கப்படும் ரொக்கத் தொகைக்கு எப்படி வரி கணக்கிடப்படும், பிஎஃப் உள்ளிட்டவை எப்படி கணக்கிடப்படும் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.


