Tamilnadu
oi-Vishnupriya R
சென்னை: சென்னை திருவொற்றியூரில் 6 மணி நேரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கொந்தளித்த மக்கள், அடுத்த மாசம் மின் கட்டணத்தை செலுத்த மாட்டோம் என கூறி வாக்குவாதம் செய்த சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு இடங்களில் மின்வெட்டு என்பது தொடர்கதையாகி வருகிறது. இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டுகளால் மக்கள் தூக்கத்தை தொலைத்துவிட்டு தவித்து வருகிறார்கள்.

தலைநகர் சென்னையில் மணிக்கணக்கில் தினமும் நடத்தப்படும் மின்வெட்டால் ஆத்திரமடையும் பொதுமக்கள் தினந்தோறும் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள்.
அந்த வகையில் திருவொற்றியூர் நேற்று இரவு 6 மணி நேரம் மின்வெட்டு இருந்ததாம். இதுகுறித்து மின்சார வாரியத்திற்கு மக்கள் போன் செய்தால் யாரும் பதிலளிக்கவில்லை. போனை போட்டு போட்டு ஓய்ந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையறிந்த போலீஸார் அங்கு வந்து அவர்களை கலைந்து போக சொன்னார்கள். அதற்கு அந்த மக்கள், கலைந்து போக மறுத்து, “கரன்ட் பில் கட்டலைன்னா ஒரு நிமிஷம் கூட தாமதிக்காமல் பியூஸ் கேரியரை பிடுங்கிட்டு போயிடுறாங்கல்ல! இப்படி 6 மணி நேரம் கரன்ட் இல்லாமல் நாங்கள் கொசுக் கடியில் கஷ்டப்பட வேண்டுமா?
அடுத்த மாதம் கரன்ட் பில் கட்ட மாட்டேன். யார் வந்தாலும் உதைதான். போன் பண்ணா எடுக்க மாட்றாங்க” என போலீஸாருடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமாரிடம் கேட்டால், பியூஸ் கேரியரை யாரோ வேண்டுமென்றே திருடி செல்கிறார்கள் என ஒரு வீடியோவை காட்டுகிறார்.
அதெப்படி திமிங்கலம்! காலையில் பியூஸ் கேரியரை திருடினால் இரவில் கரன்ட் போகும் என கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் மின் துண்டிப்பை யாரோ சில அதிகாரிகள் வேண்டுமென்றே செய்வதாகவும் மின்துறையில் உள்ள கருப்பு ஆடுகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க போவதாகவும் நிர்மல் குமார் தெரிவித்திருந்தார்.
முதல்வர் விஜய் வசித்து வரும் நீலாங்கரை பகுதியில் கூட மின்வெட்டு பிரச்சினை இருப்பதை சுட்டிக் காட்டி மக்கள் ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர். மேலும் மின்சாரத் துறை தொடர்பான வெள்ளை அறிக்கையை நிர்மல் குமார் அண்மையில் வெளியிட்டிருந்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: பணியிடங்கள் 1.4 லட்சம் உள்ள நிலையில் 70 ஆயிரம் பேர் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள். பெரும்பாலான டிரான்ஸ்பார்மர்களை மாற்ற வேண்டிய நிலை உள்ளது.
நம்முடைய தேவைக்கேற்ப மின்சாரம் நம்மிடம் கையிருப்பில் இருக்கிறது. தட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. கண்டிப்பாக இதை முழுவதுமாக சீரமைக்கும் பணிகள் படிப்படியாக தொடங்கும். ஏனென்றால், எங்கெல்லாம் தவறுகள் நடைபெறுகிறது என்பதை சரி செய்துகொண்டு வருகிறோம். எங்கெல்லாம் நாம் சீரமைக்க வேண்டுமோ அதையும் சீரமைத்துக் கொண்டே வருகிறோம். இவ்வாறு நிர்மல் குமார் தெரிவித்து வருகிறார்.