வெற்றிமாறன், சிலம்பரசன் கூட்டணியின் “அரசன்’ படப்பிடிப்பு இன்னும் 60 நாள்கள் மட்டுமே மீதம் இருப்பதாகவும், அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு இடையே சிலம்பரசன் அடுத்ததொரு கெட்டப்பிற்கு ரெடியாகிறார் என்றும் தகவல்கள் பரவிவருகின்றன. இதற்காக அவர் துபாயில் உடல் எடையை குறைக்கும் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் என்கிறார்கள்.

கேங்ஸ்டர்கள் படங்களை விரும்பி பார்க்கும் ரசிகர்களை ஈர்த்த படம் ‘வடசென்னை’. ஒரு ராவான… ரசனையான… அரசியல் பேசும் கேங்ஸ்டர் படமாக கொண்டாடப்பட்டது. இந்த வடசென்னையின் சீக்குவெல்களில் ஒரு கதையாக ‘அரசன்’ உருவாகி வருகிறது. இந்த படத்தில் சிலம்பரசனுடன் ஆன்ட்ரியா, பிரியங்கா மோகன், சமுத்திரகனி, கிஷோர், விக்ராந்த், யோகிபாபு என பலரும் இருக்கிறார்கள். விஜய் சேதுபதியும் ஒரு முக்கியமான ரோலில் வருகிறார். அனிருத் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இதுவரை மூன்று ஷெட்யூல் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. இளமையான சிம்பு, 45 வயது தோற்றத்தில் உள்ள சிம்பு, மற்றுமொரு அசத்தலான கெட்டப் என சிலம்பரசனுக்கு மூன்று கெட்டப்கள் இருக்கின்றன. படத்தில் சிலம்பரசனின் ஒரு கேரக்டர் பெயர் மதுரை டைகர். மதுரையில் தொடங்கும் கதை, வடசென்னை வரை வருகிறது. மதுரையில் உள்ள ஸ்போர்ட்ஸ் இளைஞன், சென்னைக்கு வருவது ஏன், இங்கே வந்த பின் நடக்கும் அதிரடி சம்பவங்கள்தான் ‘அரசன்’ கதை ஒன்-லைன் என்றும் சொல்கிறார்கள்.

வெற்றிமாறனின் குட் புக்கில் சிம்புவுக்குத் தனி இடம் கிடைத்திருக்கிறது. படப்பிடிப்புக்குச் சரியான நேரத்தில் வரும் சிலம்பரசன், பட வேலைகள் தவிர, தனது உடல்நலம், கற்றல், எதிர்கால டார்கெட்டுகள் மிது அதிக கவனம் செலுத்தி வருகிறார். மூன்றாவது கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்ததும், அதிலிருந்து ஒரு 60 நிமிட காட்சிகளை எடிட் செய்த வெற்றிமாறன், தயாரிப்பாளர் தாணுவிடம் காண்பித்திருக்கிறார். அவர்களுடன் சிலம்பரசனும் இணைந்து படத்தை பார்த்துள்ளனர். இந்த தகவலை நாம் முன்பு சொல்லியிருந்தோம். சிலம்பரசனின் மூன்று கெட்டப்களில் இதுவரை ஒரு கெட்டப் மட்டுமே ஷூட் செய்யப்பட்டிருக்கிறது. அடுத்தடுத்த கெட்டப்புகள் படமாக்கப்பட உள்ளது.

இதுவரை நடந்த ஷெட்யூல்களில் விஜய்சேதுபதி இணையவில்லை. மூன்றாவது கட்ட படப்பிடிப்பு முடிந்த கையோடு, கிடைத்த பிரேக்கில் துபாய் பறந்திருக்கிறார் சிலம்பரசன். இந்த இடைவெளியில் வெற்றிமாறனும் ரிலாக்ஸ் ஆகவில்லை. கென் கருணாஸை வைத்து அவர் இயக்கி வரும் ‘ராஜன் வகையறா’ படப்பிடிப்பில் பிசியாகிவிட்டார். இது ஒரு பக்கம் பரபரக்கிறது. கோவில்பட்டியில் நடந்த முதல் ஷெட்யூல் படப்பிடிப்பில் சிலம்பரசனை பார்க்க வந்ததோடு சரி.. இதற்கிடையே துபாயில் ஸ்லிம் ஆகிவிட்டு சென்னை சிலம்பரசன் இன்னும் சில தினங்களில் சென்னை திரும்புகிறார். அவர் வந்ததும் அடுத்த கட்ட படப்பிடிப்பை தொடர்கின்றனர். இதற்காக கிழக்கு கடற்கரைச் சாலையில் வடசென்னையை செட் போட்டுள்ளனர் என்றும் அங்கே தான் படப்பிடிப்பை தொடர்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள். இளமையான சிம்பரசனின் தோற்றம் அடுத்த ஷெட்யூலில் தெரிய வரும். இன்னொரு விஷயத்தையும் சொல்கிறார்கள். இந்த படத்தில் விஜய் சேதுபதியின் ரோல் வெறும் பத்து நிமிடங்கள் மட்டுமே இடம்பெறும் என்றும், மிரட்டலான போலீஸாக அவர் வருகிறார் என்றும் தகவல்.