அமித் திவாரி, இந்திய தேர்தல் ஆணையம் (ECI), மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் (CBIC) மற்றும் மகாராஷ்டிரா அரசுக்கு தனித்தனியாக மனுக்கள் அனுப்பியுள்ளார். அதில், CJP-யின் சட்டபூர்வ நிலை, மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் அறிவித்த ரூ.1 கோடி நிதி மற்றும் அபிஜீத் திப்கேவின் தந்தை பகவான்ராவ் திப்கேவின் சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மகாராஷ்டிரா தொழில் மேம்பாட்டு கழகத்தில் (MIDC) இளநிலை பொறியாளராக பணியாற்றிய பகவான்ராவ் திப்கே மாதம் ரூ.60,000 முதல் ரூ.65,000 வரை மட்டுமே சம்பளம் பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த வருமானத்தில் தனது குழந்தைகளை அமெரிக்காவில் உயர்கல்வி படிக்க எப்படி அனுப்ப முடிந்தது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அமித் திவாரி வலியுறுத்தியுள்ளார். வருமானத்திற்கு அதிகமான சொத்து இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
மேலும், அரசியல் கட்சியைப் போல செயல்பட்டு நன்கொடைகளைப் பெறும் CJP, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 29A-ன் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், பதிவு செய்யாமல் ரூ.1 கோடி நிதி பெற்றிருப்பது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.அதேபோல், கபில் சிபல் அறிவித்த ரூ.1 கோடி நிதிக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்க வேண்டும் என்று சிபிஐசிக்கும் மனு அளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், அபிஜீத் திப்கே புனேயில் பத்திரிகையியல் படித்த பிறகு அமெரிக்காவின் Boston University-யில் பொது தொடர்பியல் (Public Relations) துறையில் முதுகலைப் பட்டம் முடித்துள்ளார். 2020 முதல் 2023 வரை ஆம் ஆத்மி கட்சியில் (AAP) சமூக வலைதள உத்தி மற்றும் தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபட்டிருந்த அவர், தற்போது வேலைவாய்ப்புகளைத் தேடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
