CJP: கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் அடுத்த பிளான் என்ன? பஞ்சாப்பில் போராட்டம்? அபிஜித் தீப்கே சூசகம்! | What next for CJP? Abhijeet Dipke says Punjab paper leak controversy also on radar

Spread the love

India

oi-Vignesh Selvaraj

டெல்லி: நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் நடத்திய போராட்டம் வெற்றி பெற்ற நிலையில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் எதிர்காலத் திட்டம் என்ன என்பது குறித்து அக்கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் இறங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி. ஒரு மாதத்தைக் கடந்த இந்தப் போராட்டத்தின் முடிவில், தர்மேந்திர பிரதான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும், சிஜேபி கட்சியினரின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளது மத்திய அரசு.

What next for CJP Abhijeet Dipke says Punjab paper leak controversy also on radar

கரப்பான்பூச்சி கட்சி – அடுத்து என்ன?

நாடு தழுவிய அளவில் மாணவர்கள், இளைஞர்களின் மிகப்பெரிய ஆதரவைப் பெற்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அடுத்து என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. கல்வி தொடர்பான விஷயங்களுக்காக தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுமா, எதிர்காலத் திட்டம் என்ன என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அபிஜீத் தீப்கே, “எதிர்கால வியூகத்தை நாங்கள் விரைவில் அறிவிப்போம். எங்கள் போராட்டம் நேற்றுதான் டெல்லியில் முடிவடைந்தது. எனவே எங்களுக்குச் சிறிது அவகாசம் கொடுங்கள். கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. எந்தவொரு மாணவர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

வினாத்தாள் கசிவு

வினாத்தாள் கசிவு தொடர்பான சட்டத்தில் கடுமையான தண்டனைகளை விதிக்கும் வகையிலான திருத்தங்களை அரசு முன்மொழிந்துள்ளது. இதில் விரைவு நீதிமன்றங்கள், துரித விசாரணைகள், 10 கோடி ரூபாய் வரையிலான அபராதம் மற்றும் குறைந்தபட்ச சிறைத் தண்டனையை 3ல் இருந்து ஐந்து ஆண்டுகளாகவும், அதிகபட்ச தண்டனையை பத்து ஆண்டுகளாகவும் உயர்த்துவது ஆகியவை அடங்கும்.

இருப்பினும், வலுவான பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் தெளிவான நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் மூலம் வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நிகழ்வதையே முன்கூட்டியே தடுப்பதற்குத்தான் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

அபிஜித் திப்கே

ஒரு கூட்டாட்சி நாடாக, மாநிலங்கள் தங்கள் நுழைவுத் தேர்வுகளை நடத்த இந்தியா அதிகாரமளிக்க வேண்டும். அதேவேளையில், இந்திய அரசு பாதுகாப்புத் தரநிலைகள், நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்க வேண்டும்” என அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் தேர்வு முறைகேடு புகார்

மேலும் பேசிய அபிஜித் தீப்கே, “பஞ்சாப் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிப்போம். அதற்கான திட்டமிடலில் தற்போது ஈடுபட்டு வருகிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் ஆசிரியர் தகுதித் தேர்வு, 12 ஆம் வகுப்பு ஆங்கிலத் தேர்வு, பார்மசி ஆபிசர் தேர்வு உட்பட 6 வெவ்வேறு தேர்வுகளின் வினாத்தாள் கசிந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அம்மாநிலத்தின் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஷிரோமணி அகாலி தளம் கட்சியும் வினாத்தாள் கசிவுகளால் மாநிலத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, பஞ்சாப் கல்வி அமைச்சர் ஹர்ஜோத் பைன்ஸின் ராஜினாமா செய்ய வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தான், அதுபற்றி பேசி இருக்கிறார் அபிஜித் திப்கே.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *