குஜராத் மாநிலம் ராஜ்கோட் அருகில் உள்ள அஞ்சார் என்ற கிராமத்தை சேர்ந்த 14 வயது மைனர் பெண்ணை அவரது சொந்த தந்தையே வீட்டில் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்குத் தொலைபேசியில் அழைத்ததைத் தொடர்ந்து, போலீஸார் அவரது வீட்டிற்கு சென்று அவரை அஞ்சார் போலீஸ் நிலையத்திற்குக் அழைத்து வந்து விசாரித்தனர்.
இதில் அப்பெண் தனக்கு நடந்த துயரத்தை தெரிவித்தார். போலீஸாரின் விசாரணையில், சிறுமி தனக்கு தெரிந்த ஒரு சிறுவனுடன் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டு அவளது தந்தை ஆத்திரமடைந்தார்.
அவர் அவளது மொபைல் போனை பிடுங்கி உடைத்து போட்டார். அதோடு அவளைத் தாக்கி, அவளது தாயின் முன்னிலையிலேயே அவளைப் பாலியல் வன்கொடுமை செய்தார். இக்குற்றச் செயலை அவளது தாய் தனது மொபைல் போனில் காணொளியாகப் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அச்சிறுமியின் தந்தை மற்றும் தாய் ஆகிய இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்த மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. அதனை ஆய்வு செய்தபோது அதில் அக்குற்றச் செயலுடன் தொடர்புடைய புகைப்படங்கள் மற்றும் ஒரு காணொளி இருந்ததை கண்டுபிடித்து இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.
இது குறித்து அஞ்சார் இன்ஸ்பெக்டர் எச். ஏ. ஜடேஜா கூறுகையில், அந்தச் சிறுமி இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பே போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் போலீஸ் வாகனம் அந்த இடத்தைச் சென்றடைவதற்கு முன்பே அவரது தந்தை மொபைல் போனை பிடுங்கி அணைத்துவிட்டதால், போலீஸாரால் அவரைக் கண்டறிவது கடினமாகிவிட்டது”‘ என்றார்.
அந்தச் சிறுமி மீண்டும் தொலைபேசியைப் பயன்படுத்தி 112 என்ற எண்ணிற்கு அழைத்து தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதாக அவள் கூறினாள். போலீஸார் அவளை போலீஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்று, விசாரித்து வழக்கு பதிவு செய்து, அவளது பெற்றோர் இருவரையும் கைது செய்தனர். அந்த குடும்பம் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தது ஆகும். அஞ்சார் பகுதியில் ஆறு ஆண்டுகளாக வசித்து வந்தனர். அவர்கள் கூலித் தொழிலாளர்களாகப் பணியாற்றி வந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இத்தம்பதிக்கு நான்கு மகள்கள் உள்ளனர். அவர்களில் பாதிக்கப்பட்டவரே மூத்தவர் ஆவார்.