டெல்லியில் நேற்று ஹோட்டலில் தீவிபத்து ஏற்பட்டு 21 பேர் உயிரிழந்த நிலையில், இன்று பீகார் மருத்துவமனையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. பீகாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 நோயாளிகள் உயிரிழந்தனர்.
முசாபர்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசாத் மருத்துவமனையின் ஐந்தாவது மாடியில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலை 3.30 மணிக்கு நோயாளிகள் உறங்கிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட இத்தீவிபத்தால் மருத்துவமனையில் நோயாளிகளும், அவர்களின் உறவினர்களும் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள தப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தீயணைப்பு துறையினர் 3.55 மணிக்கு மருத்துவமனைக்கு வந்து மீட்புப்பணிகளை மேற்கொண்டனர். தீப்பிடித்துக்கொண்ட தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகள் அனைவரும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.
அவர்களில் சிலர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,”‘நாங்கள் 15-20 நோயாளிகளை ஐசியூவில் இருந்து மீட்டோம், அதில் இருவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர். மற்ற நோயாளிகள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை குறித்து எங்களுக்கு எந்த அறிவிப்பும் இல்லை”என்று கூறினார்.
இத்தீவிபத்தில் மொத்தம் 4 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தீவிபத்தில் இருந்து மீட்கப்ப்பட்ட 13 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக மாவட்ட நீதிபதி சுப்ரத் குமார் தெரிவித்தார். ஆரம்பக்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக இத்தீவிபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.