தமிழ்நாட்டிற்கு வரும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கி வரும் கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த 15 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டிற்கு வரவிருந்த தொழில் முதலீடுகள் தொடர்பான ரகசியத் தகவல்கள் ஆந்திர அரசுக்கு கசிந்ததாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் “தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான Guidance TN முகமையில் நடப்பது என்ன? 15 பணியாளர்கள் நீக்கம் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்!” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான Guidance TN முகமையில் பணியாற்றி வந்த 15 பேர் முதலீட்டாளர்கள் குறித்த தகவல்களை பிற மாநிலங்களுக்கு கசிய விட்டதாகவும், அதனால் அவர்கள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. தமிழகத்தின் முதலீடு ஈர்ப்பு கட்டமைப்பையே நிலைகுலையச் செய்யும் இந்த விவகாரம் குறித்து யூக செய்திகள் மட்டுமே வெளிவரும் நிலையில், அரசு எந்த விளக்கமும் அளிக்காமல் அமைதி காப்பது கவலையளிக்கிறது.
தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்காக பேச்சு நடத்திக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் குறித்த விவரங்களை Guidance TN அமைப்பில் பணியாற்றியவர்கள் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டவிரோதமாக வழங்கியதாகவும், அது கண்டுபிடிக்கப்பட்டதால் தான் 15 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. அவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் மூவர் ஆந்திர அரசின் தொழில் துறைக்கு முதலீடுகளை ஈர்த்துத் தரும் பணியில் சேர்ந்ததாக வெளியான செய்திகள் இந்தக் குற்றச்சாட்டை உறுதி செய்தன.