ISRO-வில் கிடைத்த வாய்ப்பைத் தவிர்த்துவிட்டு, சொந்தமாகத் தொழில் தொடங்கும் முடிவை எடுத்த ஐ.ஐ.டி பாம்பே முன்னாள் மாணவர் மனோஜ் குமார் மீனா, இன்று ரூ.1,000 கோடிக்கும் அதிகமான வருவாய் ஈட்டும் ஒரு நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். அவருடன் சிபப்ரதா தாஸும் இணைந்து கட்டமைத்த இந்த நிறுவனத்தின் வளர்ச்சிப் பாதை, இன்றைய ஸ்டார்ட்அப் உலகத்தில் குறிப்பிடத்தக்க ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
ISRO முதல் இன்குபேட்டர் வரை
ராஜஸ்தானைச் சேர்ந்த மனோஜ் மீனா, ஐ.ஐ.டி பாம்பேவில் எலக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் படித்தவர். படித்து முடித்ததும் ISRO-வில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், சொந்தமாகத் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றை உருவாக்கும் ஆர்வம் அவருக்கு இருந்ததால், அந்த வாய்ப்பைத் தவிர்க்க முடிவு செய்தார். அதன்படி, 2012-ல் ஐ.ஐ.டி பாம்பேயின் “SINE’ இன்குபேட்டர் மூலம் ‘ஆட்டம்பெர்க் ‘ (Atomberg) தொடங்கப்பட்டது.

அடுத்த ஆண்டில் அவருடன் சிபப்ரதா தாஸ் இணைந்தார். ஐ.ஐ.டி பாம்பேவில் சிவில் இன்ஜினீயரிங் படித்த தாஸ், கல்லூரி காலத்திலிருந்தே இ-காமர்ஸ் முயற்சிகளில் ஈடுபாடு கொண்டவர். நிறுவனத்தின் தொழில்நுட்பப் பணிகளை மனோஜ் கவனித்துக் கொள்ள, பிசினஸ் வியூகம், பிராண்ட் உருவாக்கம் மற்றும் நிறுவனத்தின் வளர்ச்சிப் பணிகளை தாஸ் முன்னெடுத்துச் சென்றார்.
பல கட்டத் திணறல்களும், திருப்புமுனையும்
ஆரம்பத்தில் ஆட்டம்பெர்க் ஒரு நுகர்வோர் உபயோகப் பொருள் நிறுவனமாகச் செயல்படவில்லை. தரவு சேகரிப்பு அமைப்பு, வெகிக்கில் டிராக்கிங் சிஸ்டம்ஸ் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பத் திட்டங்களில்தான் கவனம் செலுத்தியது. ஐ.ஐ.டி., டி.ஆர்.டி.ஓ., பார்க் போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு புராஜெக்ட்டுகள் செய்து கொடுத்தாலும், இந்தத் துறையை பெரிய அளவில் விரிவுபடுத்துவது கடினம் என்பதை நிறுவனர்கள் உணர்ந்தனர்.
இதையடுத்து, 2015-ல் ‘சீலிங் ஃபேன்’ சந்தைக்கு மாறினர். வழக்கமான இன்டக்ஷன்-மோட்டார் மின்விசிறிகள் 70 முதல் 80 வாட்ஸ் வரை மின்சாரத்தைப் பயன்படுத்திய நிலையில், இவர்கள் உருவாக்கிய BLDC மின்விசிறிகள் சுமார் 28 வாட்ஸில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இது மின்சாரச் செலவைக் குறைப்பதோடு, ஸ்மார்ட் கன்ட்ரோல்ஸ் போன்ற அம்சங்களையும் வழங்கியது.