Mammootty: "சினிமாவில் 10 ஆண்டுகால இடைவெளி ஏன்?" – அடூர் கோபாலகிருஷ்ணன் பதில்

Spread the love

மலையாள சினிமாவின் மூத்த இயக்குநரான அடூர் கோபாலகிருஷ்ணன், 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மம்மூட்டியை வைத்து ‘பாதயாத்ரா’ படத்தை இயக்கியிருக்கிறார்.

2016-இல் வெளியான ‘பின்னையும்’ திரைப்படத்திற்குப் பிறகு இவர் இயக்கியுள்ள இப்படத்தில், மம்மூட்டி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இத்திரைப்படம் குறித்தும், 32 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டியுடன் இணைந்தது குறித்தும் அடூர் கோபாலகிருஷ்ணன் ‘இந்தியா டுடே’ ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.

Padayaatra - Movie
Padayaatra – Movie

அவர் பேசுகையில், “கொரோனா காலத்தில் திரையரங்குகளில் படம் வெளியாக முடியாத சூழலில் நாம் ஏன் புதிய திரைப்படங்களை உருவாக்க வேண்டும்?” என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. இதனால் சில காலம் படம் இயக்குவது பற்றி யோசிப்பதையே நிறுத்திவிட்டேன்.

ஆனால், மீண்டும் மக்கள் திரையரங்குகளுக்கு வந்து படங்கள் பார்க்கத் தொடங்கியதும், எனது அடுத்த படைப்புக்கான திரைக்கதையை எழுதி இப்படத்தை இயக்கி முடித்துள்ளேன்.

ஒரு படத்தை இயக்கி முடித்தவுடன் அதிலிருந்து விடுபட்டு, மற்றொரு புதிய கதைக் களத்தைக் கண்டறிய எனக்கு எப்போதும் சில காலம் தேவைப்படும்.

திரைப்பட உருவாக்கத்திற்கு இடையே எடுத்துக்கொள்ளும் இத்தகைய இடைவெளிகள், எனது படைப்புகளை மீண்டும் சுயபரிசோதனை செய்துகொள்ள உதவுகின்றன.

அடூர் கோபாலகிருஷ்ணன்
அடூர் கோபாலகிருஷ்ணன்

இதற்கு முன்பு நாங்கள் இருவரும் இணைந்து ‘அனந்தரம்’ (1987), ‘மதில்கள்’ (1990) மற்றும் ‘விதேயன்’ (1994) ஆகிய 3 வெற்றிப் படங்களை உருவாக்கியுள்ளோம்.

தற்போது 32 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகியுள்ள இந்த ‘பாதயாத்ரா’ திரைப்படம், எங்கள் கூட்டணியில் உருவான 4-வது திரைப்படமாகும். நான் இதுவரை இயக்கியுள்ள 13 திரைப்படங்களில் அதிக முறை நடித்த ஒரே நடிகர் மம்மூட்டிதான்.

எங்கள் கூட்டணியில் வெளியான முந்தைய படங்களுக்காக மம்மூட்டி தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். அதேபோன்று, இந்த திரைப்படத்திலும் அவரது நடிப்பு மிகவும் அபாரமாகவும் அசத்தலாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.” எனப் பகிர்ந்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *