வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்காக நடத்தப்பட்ட நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மறுதேர்வு வரும் 21-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக தேர்வுக்குத் தயாராகி, அது நிறைவடைந்ததும் “அப்பாடா’ என நிம்மதிப் பெருமூச்சு விட்ட மாணவர்கள் பலரும் மீண்டும் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். விடுமுறை நாள்களைக் கொண்டாடச் சென்ற பல மாணவர்கள் கோச்சிங் சென்டர்களுக்குத் திரும்பியுள்ளனர்.

இது போன்ற சூழலில் மாணவர்களை எப்படிக் கையாள வேண்டும் என ஆலோசனை அளிக்கிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் முகில் சக்தி.
“ஒரு விஷயத்துக்காக கடும் முயற்சி செய்து, நேரத்தை முதலீடு செய்து, கோச்சிங்குக்காக பண் செலவழித்து அதில் வெற்றி கிடைக்கவில்லை என்றால், யாராக இருந்தாலும் வருத்தம் ஏற்படும். அதுவும் மாணவர்கள் எனும்போது மிகவும் சென்சிட்டிவாகவே இதை எடுத்துக்கொள்வார்கள். சோகம், கோபம், எரிச்சல், நம்பிக்கையின்மை, ஏமாற்றம் எனப் பல்வேறு உணர்வுகளுக்கு ஆளாவார்கள்.