இந்த நிலையில், தமிழகத்திலேயே உடன்குடி பகுதியில்தான் சீனி மூட்டைகள் அதிகளவில் கொள்முதல் செய்யப்படுவதாக திருநெல்வேலி ஜி.எஸ்.டி. அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் உடன்குடி பகுதியில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அதிகாரிகள் நடத்திய ஆய்வில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.
கடந்த சில வாரங்களில் மட்டும் உடன்குடி பகுதியில் ரூ.5 கோடி அளவிற்குச் சீனி மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. பதநீரில் 60 முதல் 70 சதவீதம் வரை சீனியைக் கலந்து கருப்பட்டி தயாரித்து, அதனை அசல் கருப்பட்டி எனக்கூறி ரூ.6 கோடி வரை விற்பனை செய்து மோசடி செய்யப்பட்டுள்ளது.

சீனி கலந்து தயாரிக்கப்பட்ட கருப்பட்டிக்கு 18% ஜி.எஸ்.டி. வரி செலுத்துவதற்குப் பதிலாக, அசல் கருப்பட்டி எனப் பொய் கூறி 5 சதவீத வரியை மட்டுமே செலுத்தி அரசுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளனர். இதுதொடர்பாக உடன்குடியைச் சேர்ந்த 5 வியாபாரிகளுக்கு ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாக ரூ.38 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.