அத்துடன், இந்தத் திட்டம் தொடங்குவதற்கு முன்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில், “கண்டறி, நீக்கு, மற்றும் நாடு கடத்து’ (‘Detect, Delete and Deport’) போன்ற அரசியல் சொல்லாடல்களைப் பயன்படுத்தியிருக்கிறார். மூத்த அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், வாக்காளர் பெயர்கள் நீக்கப்படுவதை ‘சட்டவிரோத வங்காளதேச குடியேறிகளை’ இலக்கு வைக்கும் நடவடிக்கையாக பொதுவெளியில் சித்திரித்துள்ளனர். இந்த வகையான பேச்சுகள், சட்டபூர்வமான இந்திய முஸ்லிம் குடிமக்களை அந்நிய நாட்டு குடிமக்களோடு ஒப்பிட்டுக் குழப்பத்தை விளைவிப்பதாக உள்ளது. இத்தகைய வெறுப்புப் பேச்சுகள், இந்தியா ஒப்புதல் அளித்துள்ள ‘சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையின்’ (ICCPR) பிரிவு 20(2)-ன் படி பாகுபாட்டைத் தூண்டும் செயலாக அமையக்கூடும்.
மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்டதை அறிந்த வாக்காளர்கள், முதலில் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டிருக்கிறார்கள். அங்கு தீர்வு கிடைக்காததால், உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றார்கள். ஆனால், ஏப்ரல் 6 அன்று இந்த வாக்காளர் நீக்க நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதன் பிறகு, ஏப்ரல் 16 அன்று உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு தீர்ப்பு வழங்கியது. அதில், “நீக்கப்பட்ட வாக்காளர்கள் மேல்முறையீட்டு நீதிமன்றங்களை அணுகி, தங்களுடையவை சரியான ஆவணங்கள் தான் என்று நிரூபித்து அனுமதி வாங்கி வர வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறது.