ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடம் வேர்க்காடு பகுதியில் அமைந்துள்ளது புனித சந்தியாகப்பர் திருத்தலம். தீவு மக்களின் பாதுகாவலராக கருதப்படும் இந்த திருத்தலம் மிகவும் பழமை வாய்ந்தது. இந்த திருத்தலத்தின் 484-ஆம் ஆண்டு பெருவிழா கடந்த 16-ஆம் தேதி மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இவ்விழாவில் சிவகங்கை மறைமாவட்ட பொருளாளர் ஆரோன் திருப்பலியை நிறைவேற்றினார்.

இதனை தொடர்ந்து கடந்த 9 நாட்களாக நடந்து வந்த இந்த நவநாள் திருவிழாவில் நாள் தோறும் மாலை வேளைகளில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பங்கு தந்தையர்கள் பங்கேற்று திருப்பலியினை நடத்தினர். இதில் புனித தெரசாள் பங்கு, ஓலைக்குடா, மதுரை கொம்படி, பரமக்குடி குனப்பனேந்தல், காரங்காடு, புதுப்பட்டினம், பாம்பன், மண்டபம், முத்துப்பேட்டை, அக்காள்மடம், வேர்க்கோடு, ராமேஸ்வரம், அரியாண்குண்டு, தண்ணீர் ஊற்று உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த இறைமக்கள் பங்கேற்றனர். விழாவினை முன்னிட்டு மாநிலம் முழுவதும் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.