தொடரும் கொடூரம்!
இந்த நிலையில், அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் நடந்துவந்த வழக்கு விசாரணைக்காக பெருமாள் பாண்டியன் என்பவர் கடந்த 2012-ம் ஆண்டு நீதிமன்றத்திற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தார். அவரை எதிர் தரப்பினர் கொடூரமாக வெட்டிக் கொன்றனர். இது தொடர்பாக காளிமுத்து(தற்போது கொலையானவர்) உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து நடந்து வந்த பழிக்குப்பழி சம்பவங்கள் காரணமாக கிராமத்தினர் பலரும் ஊரைக் காலி செய்துவிட்டு வெளியிடங்களுக்குச் சென்று குடியேறினர்.
பெருமாள் பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய காளிமுத்துவும் குடும்பத்துடன் ஊரை விட்டு வெளியேறினார். இரு மாதங்களுக்கு முன்பு மீண்டும் கிராமத்துக்கு வந்த அவர் கூலி வேலை செய்து குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அவரது வருகையை அறிந்த எதிதரப்பைச் சேர்ந்தவர்கள், அவரைக் கொல்லத் திட்டமிட்டு அவரது நடவடிக்கைகளைக் கண்காணித்துள்ளனர். நேற்று அவர் பைக்கில் வருவதை அறிந்து, திட்டமிட்டு அவரை கொடூரமாக கொலை செய்து தலையை வெட்டி எடுத்துள்ளனர்.
சுட்டுப் பிடிக்க உத்தரவு!
ஐந்து வயதுச் சிறுவனுடன் தந்தை கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்த நெல்லை சரக டி.ஐ.ஜி திருநாவுக்கரசு, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஸ்வேஷ் சாஸ்திரி ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். படுகாயம் அடைந்த சின்னத்துரை மீட்கப்பட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். காளிமுத்துவை கொடூரமாக கொலை செய்த கும்பலை பிடிக்க ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த கொடூர கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது முதல் கட்டமாக சந்தேகத்தின் பேரில் 5 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகளை காவல்துறையினர் பிடிக்கும் போது ஆயுதங்களால் தாக்கக்கூடும் என்பதால் அவர்களை சுட்டுப் பிடிக்கவும் காவல்துறை உத்தரவிட்டுள்ளது. 20 வருடங்களாக நீடிக்கும் பகையால் இதுவரை 9 உயிர்கள் பறிபோயுள்ளது. இரு குடும்பங்களுக்கு இடையே நீடிக்கும் பகையைத் தீர்க்க காவல்துறை தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.!