நேபாளத்தை புரட்டிப்போட்ட பனிச்சரிவு மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தால் வெளிநாட்டினர் உட்பட 1300 பேர் இறந்துவிட்டனர். மேலும் பல ஆயிரம் பேரை காணவில்லை. பல கிராமங்கள் வெள்ளத்தில் அடியோடு அடித்துச்செல்லப்பட்டுவிட்டது. இந்த வெள்ளத்தில் 12 வயது சிறுவன் செரிங் என்பவரின் பெற்றோர் அடித்துச்செல்லப்பட்டுவிட்டனர். அவன் மட்டும் எப்படியோ உயிர் தப்பித்துக்கொண்டான்.
ஆகஸ்ட் 26ம் தேதி அன்று திபெத் மற்றும் நேபாள் எல்லையில் உள்ள ரசுவாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் அங்கிருந்து இடம்பெயர்ந்த நூற்றுக்கணக்கான மக்களில் ஒருவராக காத்மாண்டுவில் தனது பாட்டி மிங்மர் டோல்மாவுடன் அந்த சிறுவன் வசித்து வருகிறான்.
சிறுவன் செரிங்கின் தாய் கம்மி. இவரது தந்தை ஃபர்சாங். இருவரும் வெள்ளத்தில் இறந்துவிட்டனர். இது குறித்து இன்னும் செரிங்கிடம் சொல்லப்படவில்லை.

மாறாக, அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் பெரியவர்கள், அவனுடைய பெற்றோர் காட்டில் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். வெள்ளத்தில் சாலைகள் அழிக்கப்பட்டுவிட்டதால் அவர்கள் திரும்பி வருவதற்கு ஓரிரு ஆண்டுகள் ஆகலாம் என்று அவர்கள் கூறி அவனை நம்ப வைத்திருக்கின்றனர்.
பெற்றோருக்காக காத்திருக்கும் சிறுவன்
ஆனால் சிறுவனின் பெற்றோர் இறந்ததை கேட்டு உறவினர்கள் சில நேரங்களில் அழுவதுண்டு. அவர்களிடம் ஏன் அழுகிறார்கள் என்று சிறுவன் கேட்கிறான். சில சமயங்களில் அவர்களுடன் சேர்ந்து அவனும் அழுகிறான். அவன் தனது பெற்றோரைப் பற்றி கேட்டபோது, அவர்கள் காட்டுக்குள் சென்று இருக்கிறார்கள் என்றும், அவர்களை அடைய வழி இல்லை என்றும் உறவினர்கள் கூறுகின்றனர். செரிங்கின் சகோதரி மிங்மருக்கு உண்மை தெரியும். அவரது பெற்றோர் இந்த உலகில் இல்லை என்று அவர் கூறுகிறார். ஆனால் செரிங் அப்படி சொல்வதில்லை. இப்போதைக்கு, அவர்கள் வீட்டிற்கு வருவார்கள் என்று நம்பி அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறான்.
ரசுவாவில் தங்களது வீடுகளை இழந்த சுமார் 520 பேர் இப்போது காட்மாண்டுவில் உள்ள ஒரு மடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்குள்ளவர்கள் மற்றவர்களுடன் தங்களது துக்கத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். முதியவர்கள் ஒன்றாக அமர்ந்திருந்து தாங்கள் இழந்தவற்றை பேசிக்கொண்டிருக்கிறார்கள்.