நடிகையும் இயக்குநருமான கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘டாக்ஸிக்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாகவிருக்கிறது.
யஷ், கியாரா அத்வானி, நயன்தாரா, ஹூமா குரேஷி என எக்கச்சக்க நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படம் பெரும் பொருட்செலவில் உருவாகியிருக்கிறது.
ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் இப்படம் மார்ச் 19-ம் தேதியே வெளியாகவிருந்தது.

ஆனால், வளைகுடா நாடுகளில் நிலவிய போர்ச் சூழல் காரணமாகப் படத்தின் ரிலீஸ் அப்போது தேதி மாற்றப்பட்டது.
பிறகு ஜூன் 4-ம் தேதி, இத்திரைப்படம் உலகமெங்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இப்போது படத்தின் ரிலீஸ் மீண்டும் மாற்றப்பட்டிருக்கிறது.
படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் நடிகர் யஷ், “சில திரைப்படங்கள் நாம் ஏன் சினிமாவை இவ்வளவு நேசிக்கிறோம் என்பதை நமக்கு நினைவூட்டும். ‘டாக்ஸிக்’ திரைப்படம் எனக்கு அப்படிப்பட்ட ஒரு பயணமாக அமைந்திருக்கிறது.
‘சினிமாகான்’ நிகழ்வில் எங்களது படத்தைப் பிரசன்ட் செய்தபோது, உலக அளவில் கிடைத்த அபரிமிதமான வரவேற்பு ஒன்றுமட்டும் உறுதிப்படுத்தியது.
இந்தத் திரைப்படம் உலகத்தரம் வாய்ந்த முழுமையான வீச்சை அடையத் தகுதியானது என்பதை நாங்கள் எப்போதும் நம்பி வந்திருக்கிறோம். ‘டாக்ஸிக்’ படத்தின் பணிகள் நிறைவடைந்துவிட்டன.

தற்போது சர்வதேச விநியோகம் மற்றும் கூட்டாண்மைப் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறோம். இதைக் கருத்தில் கொண்டு, படத்தின் வெளியீட்டுத் தேதியை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளோம்.
முன்னதாக அறிவிக்கப்பட்ட ஜூன் 4-ம் தேதி படம் வெளியாகாது. அதற்குப் பதிலாக, உலக அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட வேறொரு தேதியில் வெளியாகும். ‘டாக்ஸிக்’ விரைவில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளுக்கு வரும்.
இந்திய சினிமா தனது குரலை உரக்கப் பதிவு செய்து, உலக மேடையில் இவ்வளவு பெரிய வாக்குறுதிகளுடன் தடம் பதித்து வரும் இந்த வேளையில், தரத்தை உயர்த்துவது நம் ஒவ்வொருவரின் பொறுப்பாகும்.
ஒரு நடிகர் மற்றும் தயாரிப்பாளராக, இந்தப் படம் அதற்குரிய தாக்கத்துடன் உலகத்தை சென்றடைவதை உறுதி செய்ய, தேவையான கால அவகாசத்தை எடுத்துக்கொள்வதை இந்தியத் திரைத்துறைக்கும் நம் அனைவருக்கும் நான் செய்யும் கடமையாகவே பார்க்கிறேன்.
ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொரு மாற்றத்திலும் உங்களது ஆதரவு எப்போதும் என்னுடன் இருக்கிறது. அதை ஆழ்ந்த நன்றியுடன் நான் உணர்கிறேன். சில கதைகள் பொறுமையைக் கேட்கும்.
சில பயணங்கள் அதைக் கட்டாயப்படுத்தும். நீங்கள் கொண்டாடி மகிழக்கூடிய ஒரு படத்தை, இந்திய சினிமாவிற்குப் பெருமை சேர்க்கும் ஒரு தருணமாக இந்தப் படத்தை உங்களுக்கு வழங்குவோம் என்று உறுதியளிக்கிறோம்” எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.
இப்படத்தையும் கே.வி.என் தயாரிப்பு நிறுவனம்தான் தயாரித்திருக்கிறது. ‘ஜனநாயகன்’, ‘டாக்ஸிக்’ என கே.வி.என் நிறுவனம் தயாரித்திருக்கும் இரண்டு திரைப்படங்களின் ரிலீஸ் தேதியிலும் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.
தேர்தல் முடிவுகள் வெளியானப் பிறகு சென்சார் சான்றிதழ் பெற்று, ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகும் எனவும் தகவல்கள் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.