Weather Update: இன்று 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட்… கனமழைக்கு வாய்ப்பு! – Kumudam

Spread the love

தெற்கு உள் கர்நாடகம் முதல் மன்னார் வளைகுடா வரை தமிழ்நாடு பகுதிகள் வழியாக நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, நீலகிரி, கோவை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மேற்கண்ட 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டிய மாவட்டங்கள் உள்ளிட்ட கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை நிலவரம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வியாழக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அடுத்த நாட்களுக்கான மழை வாய்ப்பு

செப். 17 (வியாழக்கிழமை):
நீலகிரி, கோவை, கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

செப். 18 (வெள்ளிக்கிழமை):
நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக் கடல், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் எனவும், வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *